இசை மழையில் நனைய தயாரா..! சென்னையில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி..!

ilayaraja
ilayaraja
Updated on

சென்னையில் வருகிற மே 30-ம் தேதி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இளையராஜா 1976 இல் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7000 பாடல்கள் வரை எழுதியுள்ளார். இவருடைய தனித்துவமான இசையினால் மயங்காத ரசிகர்கள் எவரும் இல்லை.

ஒரு பாடலை உருவாக்குவதற்கு வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, மாத கணக்கில் நேரமோ இவருக்கு தேவைப்பட்டதில்லை. எல்லோரும் இசையை வாசித்து தான் காட்டுவார்கள். ஆனால் இளையராஜா மட்டும் தான் இசையை பக்கா நோட்ஸாக இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பார். அமிர்தவர்ஷினி என்னும் ராகத்தை "தூங்காத விழிகள் ரெண்டு" என்ற பாடலில் அமைத்து ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் மழையை வரவழைத்தவர் இந்த இசைஞானி. இவர் தான் முதன் முதலில் ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தியவர்.

இந்தியாவில் அல்ல ஆசியாவிலேயே முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். ஆனால் இவரோ வெறும் 13 நாட்களிலேயே இசைத்து மற்ற கம்போசர்களை மிரளச்செய்தவர். ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல; அற்புதமான கவிஞரும் கூட. கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது குரு என்று கூறி மகிழ்வார் வாலி.

கடந்த 2025 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட்(Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதைத் தொடர்ந்து துபாயில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்நிலையில் வருகின்ற மே மாதம் 30 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். FROM RAJA WITH LOVE என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளனர்.சிம்பொனி மட்டுமின்றி ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் பாடல்களும் பிரத்தியேக இசையமைப்பில் ஒலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடம், டிக்கெட் விவரங்கள், முன்பதிவு குறித்த விவரங்கள் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பட்டா முதல் வில்லங்க சான்று வரை: நிலம் வாங்கும் முன் ஒருமுறை இதை பார்க்கவும்.!
ilayaraja
logo
Kalki Online
kalkionline.com