இஸ்ரேலின் தாக்குதல் அளவு கடந்து சென்றுள்ளது. தற்போது இஸ்ரேல், காசாவில் உள்ள ஐநாவின் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் காசாமீதான ஆதிக்கத்தை உடைக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதேபோல் ஹமாஸை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. இதனால், போர் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. யார் என்ன கூறினாலும், இஸ்ரேல் போரை நிறுத்துவதாக தெரியவில்லை. இதனால், அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இத்தனை நாட்கள் ஆன நிலையில், இஸ்ரேல் தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு இஸ்ரேலின் செய்தி தொடர்பாளரே, "ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு." என்று கூறியுள்ளார்.
இப்போதுதான் இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், கோபமும் அதிகமாகியுள்ளது. தற்போது ஐநா நடத்தி வந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே பள்ளியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மேலும் இரண்டாவது முறை எச்சரித்தும் மீண்டும் தாக்கியிருக்கிறது. மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேச போர் விதி. ஆனால், இந்த தாக்குதல் மூலம் விதியை இஸ்ரேல் மீறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா பள்ளியை எதிர்த்து ஐநாவையும், ஐநாவின் விதிகளையும் அவமதித்திருக்கிறது, இஸ்ரேல். அதேபோல் அப்பாவி மக்கள் தஞ்சமடையும் பள்ளிகளை தாக்கி மனிதநேயத்தையும் இழந்துள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.