

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் இழுபறியில் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் பல்வறு முயற்சிகளை எடுத்தாலும், இதுவரை அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் லெபனான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
இன்று லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 2 கிமீ நீளம் கொண்ட சுரங்கப் பாதையை இஸ்ரேல் வெடி வைத்து தகர்த்துள்ளது. இந்த சம்பவம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர, இனி அமெரிக்கா நேரடியாக தலையிடாது என நேற்று முன்தினம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதேசமயம் ஈரானை மீண்டும் தாக்க தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இருப்பினும் இதற்கு அமெரிக்காவின் ஒப்புதலை வேண்டி காத்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஈரானுக்கு எதிராக போரை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா, லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தும் எனவும் கடந்த வாரம் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி இருப்பது, போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2 கிமீ நீளம் கொண்ட சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்பின் பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்போம் எனக் கூறி வரும் இஸ்ரேல், இந்த சுரங்கப் பாதையை வெடி வைத்து தகர்த்துள்ளது.
இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் பணி மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களைக் கடந்தும் முடிவுக்கு வராத போர் காரணமாக, பல்வேறு உலக நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஈரான் மீதான தாக்குதல் தற்சமயம் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஹார்மூஸ் நீரிணை திறக்காமல் இருப்பதால் கச்ச எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. மேலும் 1 மாதத்திற்கு இந்தப் போர் நீடித்தால், அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.