காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தற்போது தற்காலிகமாக போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், காசா இஸ்ரேல் போர் தற்காலிகமாக முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தினர். பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் ஹமாஸ் படையினர். சிலரை இஸ்ரேல் மீட்டது என்றாலும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சபதம் எடுத்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 7 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இவர்களின் போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பைத் தாக்க இஸ்ரேல், ஈரான் தூதரகத்தைத் தாக்கியது. இதில் ஈரானின் உயர் அதிகாரிகள் உட்பட சிலர் உயிரிழந்தனர். இதனால், ஈரான்- இஸ்ரேல் போரும் தொடங்கியது.
இந்த போரில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாது, ஏராளமான பொதுமக்களும் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். 7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் மற்றும் எகிப்த்தின் போர் நிறுத்தத்திற்கான ஒப்புதலை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டதாக பதிலளித்தார் என்று கூறப்படுகிறது. இதனால், பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹமாஸ் இஸ்ரேலுக்கு சில நிபந்தனைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இஸ்ரேல் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்தம் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன்னர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் காசாவில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என்றும், இஸ்ரேல் ராணுவத்தை காசாவிலிருந்துத் திரும்ப பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.