

உலகையே அதிர வைக்கும் விதமாக நடைபெற்று வரும் அமெரிக்கா - இஸ்ரேல் போர் (Geopolitical Conflict) காரணமாக,உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாகவே தங்கத்தின் விலை ஒரே நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.அதிலும் இந்த வருடம் (2026) துவங்கியது முதல் ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இறுதி நாளான 28 ந்தேதி ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய செய்தது. அதாவது காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரே நாளில் ரூ.5,200 வரை உயர்ந்தது.
பெரும்பாலும் விடுமுறை நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றமின்றி இருக்கும் என்ற நிலையில் மார்ச் 1 (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமென்றாலும் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.325க்கும், ஒரு கிலோ ரூ.3,25,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் (பிப்.28) வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.325க்கும், கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.3,25,000க்கும் விற்பனையாகிறது.
விடுமுறை நாளில் ஏற்பட்ட இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் போர் என்று கூறப்படுகிறது. திடீரென நிகழும் போர் அல்லது சர்வதேச பதற்றங்கள் அதிகமானால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை போன்ற அபாயமான சந்தைகளில் இருந்து தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போதைய போர் சூழலில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சங்களுக்கு போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போர் (War) ஏற்பட்டால் தங்கம் விலை ஏறும் என்பதற்கு வரலாற்றிலேயே பல முறை நடந்துள்ளதாக குறிப்புகள் உண்டு.
முதலீட்டாளர்கள் போர் செய்தி வந்தால் ஏற்படும் அதிர்ச்சி மனநிலை (Market Sentiment) காரணமாக முன்னெச்சரிக்கையாக தங்கம் வாங்குவார்கள். (Safe Haven Demand ) பாதுகாப்பு முதலீடுகளில் கவனம் பெருகும். போர் நேரத்தில் பங்குச்சந்தை, நாணயங்கள், க்ரிப்டோ போன்றவை அதிக அதிர்வுடன் (volatility) இருக்கும். அப்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்து என கருதப்படும் தங்கத்தில் முதலீட்டைத் துவங்குகிறார்கள்.
போர் காரணமாக ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு ,சரக்கு போக்குவரத்து தடைகள் உள்ளிட்ட பல தடைகளால் பணவீக்கம் அதிகரிக்கும் போது மக்கள் தங்கள் பண மதிப்பை காக்க தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.சில நாடுகள் போர் காலத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பை பாதுகாக்க தங்கத்தை அதிகமாக சேமிக்க தொடங்கும்.
ஆனால் எல்லா போர்களிலும் தங்கம் உடனே அதிகமாக உயராது.இருப்பினும், வட்டி விகிதம் (Interest Rates), அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் உலகப் பொருளாதார நிலை போன்றவையும் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. எது எப்படியோ, ஏற்கனவே உச்சத்திலுள்ள தங்கம் விலை, இந்தப் போரினால் இன்னும் எங்குச் சென்று நிற்குமோ என்ற அச்சம் நடுத்தர மக்களிடையே நிலவுகிறது.