லெபனானில் உள்ள ஐநா படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் காசா போர் தொடங்கி ஒரு வருடக் காலம் ஆகிவிட்டது. ஆனால் போர் முடிந்தப்பாடு இல்லை. மேம்மேலும் வலுவடைந்துக் கொண்டேதான் வருகின்றது. ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை குறிவைத்துதான் தற்போது இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருக்கும் ஏராளமான மக்கள் தற்போது புலம்பெயர்ந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உட்பட முக்கிய நபர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து போர் தீவிரமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேலின் தரைப்படை வீரர்கள் தரை வழியாகவும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இதற்கிடையே யாரும் எதிர்பாராத விதமாக லெபனானில் உள்ள ஐநா படையினரை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமாகியுள்ளனர். ஐநாவுக்கு சொந்தமான கட்டிடங்களை எந்த நாடுகளும் தாக்காது. அப்படி மீறி தாக்கினால் அது பெரும் பிரச்சனையை உண்டு செய்யும். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானின் தெற்கு பகுதியில் ஐநா வீரர்கள் உள்ளனர். ஆனால் அதே இடத்தில்தான் ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ளவர்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கிறது. ஆகையால் இஸ்ரேல், இந்த இடத்தில் தாக்குதல் நடத்தியே ஆக வேண்டும், ஐநா வீரர்கள் வேறு பகுதிக்கு மாற வேண்டும் என்று கூறியது. ஆனால், ஐநா அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஐநா வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உலக நாடுகள் கோபமடைந்துள்ளனர். இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா இதற்கு கவலை தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் நடவடிக்கையைப் போர்க்குற்றம் என்று இத்தாலி விமர்சித்துள்ளது.