அமெரிக்கா உட்பட சில நட்பு நாடுகளின் அறிவுரையை கேட்காமல் இஸ்ரேல், ஈரான் மீது இன்று அதிகாலையில் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அதிகாலையிலேயே பதற்றம் நிலவியிருக்கிறது.
சமீபத்தில் இஸ்ரேல், ஈரான் தூதரகத்தில் தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால் ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த சில காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், சென்ற வாரம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு எல்லைக்குள்ளேயே நுழையாதப்படி செய்ததால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே சமாதானம் பேசியது. ஆனால், அதுவும் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இஸ்ரேல் மீண்டும் இரான் மீது பதில் தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. ஒருவேளை இஸ்ரேல் ஈரான்மீது பதில் தாக்குதல் நடத்தினால், ஈரான் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்தது. அதேபோல் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எந்தவிதத்திலும் துணை நிற்காது என்று கூறியது.
இதனையடுத்து பல நாடுகள் இஸ்ரேலிடம் பதில் தாக்குதலை கைவிடும்படி இரண்டு நாட்களாக கூறி வந்தன. ஆனால், இஸ்ரேல் அதனுடைய முடிவில் திடமாக இருந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அதேபோல் ஈராக் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரே நேரத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடைபெற்றதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு உறுதி செய்துள்ளது.
நேற்று முதல்நாள் நடந்த அதிபர் – பிரதமர் - ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான கூட்டத்தில் ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவெடுத்தது. அதன் முதற்கட்டமாகதான் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்னும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான போர்தான் தற்போது இஸ்ரேல்- ஈரான் போராக மாறியுள்ளது. பாலஸ்தீனை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கியது ஈரானுக்கு பிடிக்கவில்லை. இதனால், ஈரான் மறைமுகமாக பாலஸ்தீனுக்கு உதவி செய்து வந்தது. இப்போது நேரடியாக இஸ்ரேலை ஈரான் தாக்கியதால்தான், இது இஸ்ரேல் – ஈரான் போராக மாறியுள்ளது.