இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று பலமுறை எரிமலை வெடித்ததையடுத்து, இன்று சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் இருந்த 11 ஆயிரம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, நேற்று சுலவெசி தீவில் உள்ள 'ருவாங்' என்ற எரிமலை ஐந்து முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் எரிமலை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. அதாவது, இந்த எரிமலை வெடித்து அதன் வெப்பமான சாம்பல் ஆயிரம் அடி அளவில் காற்றில் மேலெழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த எரிமலை சிதறியதை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள 800 பேர் உடனே அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். சுலவெசி தீவின் அருகிலுள்ள மனடோ என்றப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் அந்த எரிமலையை சுற்றியுள்ள 6 கிமீ தொலைவில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று இந்தோனேசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அலர்ட் பகுதியிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் தொடர்ந்து பேரிடர்கள் ஏற்படுவதற்கு காரணம் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கம்தான் என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசியாவின் எரிமலை ஆய்வு அதிகாரி ஹென்ட்ரா குனாவன் கூறியதாவது, “எரிமலைகள் மிகவும் மோசமான அளவு வெடித்து சிதறியுள்ளது. ஆகையால், எரிமலையைச் சுற்றி 6 கிமீ தொலைவுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதால், மக்கள் அங்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு, கடல் நீருடன் சேர்ந்து மோசமான சுனாமியை ஏற்படுத்தலாம். அதாவது, கடந்த 1871ம் ஆண்டு நடந்தது போல, இப்போது நடக்க வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.
இந்தோனேசியாவில் 270 மில்லியன் மக்கள் மற்றும் 120 எரிமலைகள் உள்ளன. உலகிலேயே இந்தோனேசியாவில்தான் அதிக எரிமலைகள் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்துக் கடலில் விழுந்ததில் 400 பேர் பலியாகினர். அப்போதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.