சென்னை மற்றும் பெங்களூரு இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இதுகுறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை – பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் என்பது சென்னையை பெங்களூருவுடன் இணைக்கும் ஒரு சிறந்த திட்டமாகும். சாதாரணமாக சென்னையிலிருந்து பெங்களுர் வரை பயணம் செய்வதற்கு சுமார் ஏழு மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால், இந்த விரைவுச்சாலையின் உதவியால் வெறும் நான்கு மணி நேரத்திலேயே நமது பயணத்தை முடித்துக்கொள்ளலாம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியீடு: சென்னை மற்றும் பெங்களூரு சாலைகளின் இணைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 23.2 கிலோ மீட்டர் நீளமுள்ள மதுரவாயல் - ஸ்ரீ பெரும்புதூர் இடையேயான மேம்பால உயர்மட்ட திட்டமானது இந்த நிதியாண்டிற்குள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் 3,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியை இப்போது கடக்க குறைந்தது 30 நிமிடமாவது தேவைப்படும் பட்சத்தில், இத்திட்டத்தின்கீழ் பாலம் கட்டப்பட்டால் 10 முதல் 15 நிமிடத்தில் இந்தப் பகுதியை கடக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையின் மேல் இந்தப் பாலம் கட்டப்படும். மெட்ரோ பாணியில், நடுவில் பில்லர் வைத்து அமைக்கப்படும் இந்த சாலையின் பணிகள் இந்த வருட இறுதிக்குள் தொடங்கும். மேலும், சராசரியாக, இந்த நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 1.15 லட்சம் வாகனங்கள் பயணம் செய்வது வழக்கம்தான். அதிலும் குறிப்பாக சில முக்கிய நாட்களில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இந்தச் சாலையில் பயணம் செய்கின்றன. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் சுமார் 80 சதவிகித வாகனங்கள் அதே பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணிகள் தீவிரம்: 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தமாக 258 கி.மீட்டர் தொலைவுக்கு இது ஒரு மிக நீண்ட சாலையாக வர உள்ளது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.