நீங்க ரோடு ராஜாவா? என சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வைத்துள்ள பேனர்கள், வாகன ஓட்டிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இப்படி வைத்துள்ளார்கள்? எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சென்னை போன்ற பெரு நகரத்தில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்துவது என்பது போலீஸ்காரருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்துவருகிறது. குறிப்பாக போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வைப்பது அதைவிட சிரமமாகவே உள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், விழிப்புணர்வு மூலம்தான் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வைக்க முடியும் என போலீசார் நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கையோடு, சென்னை போக்குவரத்து போலீசார் தற்போது கையில் எடுத்துள்ள யுக்தியின் பெயர் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற விளம்பர பேனர். சென்னையின் முக்கிய சாலைகளில் நீங்க ரோடு ராஜாவா? என்ற பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இதை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்தோடு பார்ப்பதுடன், இந்த கேள்விக்கு என்ன பதில் என்பது புரியாமல் செல்கின்றனர்.
போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிப்பவர்கள் தான் ரோடு ராஜா என ஒரு சிலரும், இந்த போஸ்டர் என்னவென்றே தெரியவில்லை என பலரும் மாறுபட்ட பதில்களை சொல்கின்றனர். ஒரு காலத்தில், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, தற்போது சென்னையில் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுவதற்காக நீங்க ரோடு ராஜாவா? என போக்குவரத்து போலீசார் புது விழிப்புணர்வைத் தொடங்கியுள்ளனர்.
இப்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், இந்த விழிப்புணர்வுக் கேள்விக்கான விடையை விரைவில் அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.