இத்தாலி நாட்டில் தம்பதிகள் மட்டுமே குழந்தையை தத்தெடுக்கலாம் என்ற சட்டம் இதுவரை இருந்து வந்தது. ஆனால், தற்போது இவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆன தம்பதிகள் குழந்தை இல்லாத பட்சத்தில் குழந்தையை தத்தெடுப்பார்கள். உலகில் பல நாடுகள் திருமணம் செய்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே குழந்தையை தத்தெடுக்க அனுமதி வழங்கப்படும். அதேபோல், சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையில் உள்ளவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது இத்தாலியில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், ஒரு தீர்ப்பை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பில், வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுப்பது குறைந்து வருகிறது. இதனால், அந்த குழந்தைகள் குடும்பமாக வாழ முடியாமல் தவிக்கின்றனர். எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால், இனி திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். இதே போல் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உத்தரவால், திருமண விகிதம் குறையுமோ என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே உலக நாடுகள் மத்தியில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக்கொள்ளாதது என்றும், திருமணம் செய்துக்கொள்ளாததுதான் என்றும் காரணங்களாக கூறப்படுகின்றன.
சில ஆய்வுகளில், இன்னும் சில ஆண்டுகளில், அதாவது ஏறதாழ 50 ஆண்டுகளில் மக்கள் தொகை மிகவும் சரிந்து பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால், மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளில், திருமணம் செய்யக் கோரியும் குழந்தைப் பெற்றுக்கொள்ள கோரியும் விழிப்புணர்வு நடத்தப்படுகின்றன. இப்படியான சமயத்தில் இத்தாலியில், திருமணம் ஆகாதவர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவானது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.