
இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய இன்று தான் (செப்டம்பர் 15-ம்தேதி) கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
2024-25ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல் செய்யும் அவகாசத்தை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அபராதம் செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொழில்முறை அமைப்புகள் இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இருப்பினும், காலக்கெடு நீட்டிப்பு குறித்து வருமான வரித் துறையில் இருந்து இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில், ‘இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனே தாக்கல் செய்து கடைசி நிமிட நெரிசலை தவிர்க்கவும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வருமான வரித்துறையின் ஹெல்ப் டெஸ்க் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ல் 6.77 கோடி பேரும், 2024ல் 7.28 கோடி பேரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 15 கடைசி தேதி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட கணக்குத் தணிக்கைக்கு உட்படாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தணிக்கைக்கு உட்பட்ட தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதேபோல் ITR தாக்கலை அக்டோபர் 31-ம்தேதி வரை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பின் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யும் போது பின்வரும் முக்கிய அம்சங்களை கவனிக்கவும் :
* www.incometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வருமான வரி அறிக்கையை தாக்க செய்யலாம்.
* ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட உங்கள் தொடர்பு விவரங்கள் அதாவது, மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்களை ஒருமுறை சரிபார்க்கவும்.
*IRT தாக்கல் செய்வதற்கு முன் உங்கள் படிவம் 26AS/AIS மற்றும் ஆன்லைன் போர்ட்டலில் உள்ள பிற முன் நிரப்பப்பட்ட தகவல்களை ஒருமுறை சரி பார்க்கவும்.
* தவறான கழித்தல்கள் மற்றும் விலக்குகளை கோர வேண்டாம்.
* உங்களிடம் வெளிநாட்டு வங்கிக்கணக்கு, சொத்து அல்லது வருமானம் இருந்தால், உங்கள் வருமான வரி விதிக்கப்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தாலும் உங்கள் வருமான வரிப்படிவத்தில் FA/FSI அட்டவணையை நிரப்பவும்.
நீங்களே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய விரும்பினால், வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.inக்கு சென்று அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கணக்கை தாக்கல் செய்யலாம். அதுமட்டுமின்றி கூடுதல் தகவல்களை பெற இந்த இணையதளத்தை பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், சம்பளம் தாண்டி, முதலீடுகள், சொத்துகள் பல இருந்தால், ஆடிட்டர்கள் அல்லது வருமான வரி நிபுணர்களிடம் கொடுத்து தாக்கல் செய்வது நல்லது.