

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் மிக கடுமையான பாதிப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் கிடைப்பதில் மிகவும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் ஏராளமான சிரமங்கள் ஏற்பட்டு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார். அதில் இந்தியாவின் அண்டைப் பகுதிகளில் போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இதனால் மெட்ரோ வசதியுள்ள பகுதிகளுக்கு முடிந்தவரை மெட்ரோவில் பயணியுங்கள். கார் செல்லும்போது பலரும் சேர்ந்து செல்லும் முறையை பின்பற்றுங்கள். பொருட்களை கொண்டு செல்வதற்கு ரெயிலைப் பயன்படுத்துங்கள். இந்த செயல்பாடுகள் பெட்ரோல், டீசல் செயல்பாட்டை குறைக்கும். இதன்மூலம் நாம் அந்நியச் செலவாணியைச் சார்ந்து இருப்பதை குறைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், முடிந்தவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தவும், மின்சார வாகனங்களின் (EVs) பயன்பாட்டை அதிகரிக்கவும், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் காணொளிக் கூட்டங்கள் போன்ற கோவிட் கால நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தவும், ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களையும், தங்கம் வாங்குவதையும் தவிர்க்கவும், உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோலை சேமிக்கும் வகையில் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த மக்கள் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனால் இந்தியாவின் கொரோனா காலத்தைப் போல மீண்டும் லாக்டவுன் போடப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது. இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கோவிட்-19 காலகட்டத்தில் காணப்பட்டதைப் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தாலும், பீதியடைய எந்தக் காரணமும் இல்லை என்று கூறினார். மேற்காசிய மோதல்களால் இந்திய நிதி நிலைமை பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்ததாக தெரிவித்தார்.
"நாளைக்கே ஊரடங்கு அமல்படுத்தப்படப்போவது போன்ற சூழல் இல்லை," என்று கூறிய பூரி, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடவும், அத்தியாவசியமற்ற செலவுகளைத் தவிர்க்கவும் மோடி சமீபத்தில் விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகு மக்களிடையே ஏற்பட்ட அச்சங்களைத் தணிக்கும் வகையில் பேசினார்.
அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், விநியோகப் பாதுகாப்பையும் விலை நிலைத்தன்மையையும் வலுப்படுத்த, இந்தியா உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது என்று பூரி கூறினார். அமைச்சரின் கூற்றுப்படி, எல்பிஜி உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 36,000 மெட்ரிக் டன்களிலிருந்து, சுமார் 54,000 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் எந்த பகுதியிலுமே எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று குறிப்பிட்ட அவர் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதை சூசகமாக தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயும், 45 நாட்களுக்கு தேவையான எல்பிஜி கையிருப்பும் இருக்கிறது என்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு மையமாகவும், பெட்ரோலியப் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது என்றும், அதன் சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 260 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழாய்வழி எரிவாயு "15-20 சதவீதம் மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க அளவு தூய்மையானது" என்று கூறிய அமைச்சர், தொழில்துறைகள் எல்பிஜியிலிருந்து எல்என்ஜிக்கு மாறி, குழாய்வழி எரிவாயு உள்கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய பொத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 1000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திப்பதாக குறிப்பிட்ட அவர், அதிக விலைக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வாங்கி குறைந்த விலைக்கு அவற்றை மக்களுக்கு விற்பனை செய்கின்றன, இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் வருகிறது அதனை எத்தனை காலம் அவற்றால் தாங்கி கொள்ள முடியும் என தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.