

கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு, திருமணங்களுக்காகக் கூட அத்தியாவசியமற்ற தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவைக்குமாறு பிரதமர் மோடி குடிமக்களை வலியுறுத்தினார்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் மிக கடுமையான பாதிப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் கிடைப்பதில் மிகவும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் ஏராளமான சிரமங்கள் ஏற்பட்டு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார். அதில் இந்தியாவின் அண்டைப் பகுதிகளில் போர் உக்கிரமாக நடந்து வருகிறது.
இதனால் மெட்ரோ வசதியுள்ள பகுதிகளுக்கு முடிந்தவரை மெட்ரோவில் பயணியுங்கள். கார் செல்லும்போது பலரும் சேர்ந்து செல்லும் முறையை பின்பற்றுங்கள். பொருட்களை கொண்டு செல்வதற்கு ரெயிலைப் பயன்படுத்துங்கள். இந்த செயல்பாடுகள் பெட்ரோல், டீசல் செயல்பாட்டை குறைக்கும். இதன்மூலம் நாம் அந்நியச் செலவாணியைச் சார்ந்து இருப்பதை குறைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், முடிந்தவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தவும், மின்சார வாகனங்களின் (EVs) பயன்பாட்டை அதிகரிக்கவும், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் காணொளிக் கூட்டங்கள் போன்ற கோவிட் கால நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தவும், ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களையும், தங்கம் வாங்குவதையும் தவிர்க்கவும், உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோலை சேமிக்கும் வகையில் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த மக்கள் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் திருமணம் செய்துகொள்வது, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது மற்றும் விடுமுறையைக் கழிப்பது போன்ற கலாச்சாரம் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது ஒத்திவைக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சமையலில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இது இந்த நேரத்தில் நாட்டிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று மோடி கூறினார். இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளைச் சமாளிக்க உதவுவதற்கும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஒரு தேசபக்தி கடமையாகச் சித்தரித்தார்.
சுயசார்பு எனும் கருப்பொருளை வலியுறுத்திப் பேசிய பிரதமர், நீங்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் பட்டியலைத் தயாரித்து, அவற்றில் எவையெல்லாம் வெளிநாட்டுப் பொருட்கள் என்பதை கண்டறியுங்கள் என்று கூறினார். மக்கள் வெளிநாட்டுப் பொருட்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்று குறிப்பிட்ட அவர், ஆனால், கூடிய விரைவில் சுயசார்பை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் தாம் "உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்" (Vocal for Local) என்ற முழக்கத்தை முன்வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
நாட்டை மேலும் சுயசார்புடையதாக மாற்றும் வகையில், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
அதிக தங்க இறக்குமதி, எரிபொருள் இறக்குமதிக்கு அவசியமான அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் குறைக்கிறது; குறிப்பாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 126 டாலரைத் தாண்டியுள்ள நிலையில் இது அவசியமாகிறது. முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தை தானமாக வழங்கினர். இன்று தானம் தேவையில்லை, ஆனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அவசியமின்றி தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியானது இப்போது ‘MMC’ — அதாவது ‘முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ என்று அழைக்கப்படுகிறது என்று மோடி கிண்டலாகக் குறிப்பிட்டார். நாட்டில் மாவோயிசம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியானது நக்ஸலைட்டுகளைக் காப்பாற்ற முயன்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், இன்னும் சில தினங்களில் வீட்டு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழலிலே பிரதமர் மோடி பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துமாறும், எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.