

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தவெக அமைச்சரவையில் இணைந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்.
தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார். இடதுசாரிகள், காங்கிரசை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல் கட்சி. இன்று நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(IUML) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான நீண்டகால நட்பை முறித்துக் கொண்டுள்ளதாகவும், இனி திமுக கூட்டணியில் தொடர இயலாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தவெக தலைமையிலான புதிய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததையடுத்து ஏற்பட்ட தொடர்ச்சியான அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா காலம் முதல் சுமார் 60 ஆண்டுகளாக ஐ யூ எம் எல் கட்சி திமுகவுடன் இணக்கமான தேர்தல் கூட்டணியைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இனி திமுக கூட்டணியில் நீடிக்க இயலாது என கட்சி முடிவெடுத்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஐயூஎம்எல், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்த புதிய கூட்டணி அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இணைந்தது. இது குறித்து அதாவது தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்த பொழுது அதன் தலைவர் காதர் மொகிதீன் தனது கட்சியினரிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் நாகரிகத்தை கடைபிடித்து வரும் இயக்கமாகும். யாரையும் வசைபாடக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளோம். நீண்ட காலமாக திமுக கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதித்து, பாஜக அனுசரணையுடன் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற பரந்த நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய துணை நின்றிருப்பதால் இந்த முடிவை திமுக நண்பர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்களும் மறுப்பு தெரிவித்து கடும் சொற்களைப் பயன்படுத்தி வருவது வருத்தத்தை அளிக்கிறது என்றும், இனி அம்மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஐயூஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் வாணியம்பாடி எம்எல்ஏவும் சட்டப்பேரவை கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுவில் இடம்பெற்றார். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி திமுக கூட்டணியில் இருந்து இக்கட்சி விலகுவதாகவும், தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியுடன் பயணிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி திமுக நடத்தும் எந்தவொரு போராட்டங்கள் அல்லது அரசியல் நிகழ்வுகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.