
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல்படியாக தற்போது தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்க் கடனுக்கு விண்ணப்பித்த நாளிலேயே கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். விரைவில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது, வெகு விரைவிலேயே ஒரே நாளில் பயிர்க் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில், தற்போது ஆன்லைனில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் தினத்திலேயே பயிர்கள் கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை பயிர்க் கடனுக்கு விண்ணப்பித்தால், கடன் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஒருவார காலம் ஆகி விடும். ஆனால் இனி இந்த கால தாமதம் இருக்காது என்பதால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில் ஆன்லைன் வழியாக பயிர்க் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டுறவு வங்கி சேமிப்புக் கணக்கு எண் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் கட்டாயமாகும்.
சாகுபடி தொடர்பான விவரங்களை வேளாண் துறையிடமும், விளைநிலம் தொடர்பான விவரங்களை வருவாய்த் துறையிடமும் ஆன்லைன் வழியாக விவசாயிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்துடன் இணைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள் சமர்ப்பித்த விவரங்களை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர், கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் சரிபார்த்து, அன்றைய தினமே கடன் தொகையை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை பயிர்க் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தின் 5 விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டது.
சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ விவசாயம் செய்யும் விவசாயிகள் உடனடி பயிர்க் கடனுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஏற்கனவே வேறு நிறுவனத்திடம் கடன் வாங்கியிருந்தால், அதே தேவைக்காக பயிர்க் கடனுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தாத விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
கடந்த 1908 இல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் தெடங்கப்பட்டது. 117 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் இந்த சங்கம், தற்போது உடனடி பயிர்க் கடனையும் வழங்குகிறது.