

ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் ஜோஹ்ரி, தனது மகள் ஸ்ருதி ஜோஹ்ரியின் திருமணத்திற்காக சுமார் 3 கிலோ வெள்ளியில் கலைநயம் மிக்கத் திருமண அழைப்பிதழை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். "திருமணத்திற்கு உற்றார் உறவினர்களோடு தெய்வங்களும் நேரில் வந்து ஆசி வழங்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தில் இந்த அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8x6.5 அங்குல அளவில், ஒரு அழகான ஆபரண பெட்டி வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 65 கடவுள்களின் திருவுருவங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
தொழிலதிபர் ஷிவ் ஜோஹ்ரி மகள் ஸ்ருதி ஜோஹ்ரிக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயித்துள்ளார். தன்னுடைய அன்பான மகளுக்கு சிறப்பான வகையில் பரிசு அளிக்க விரும்பிய இவர் திருமண அழைப்பிதழையே பெரும் செலவில் உருவாக்கியுள்ளார். ஆபரணங்கள் வைக்கும் பெட்டியைப் போல கைவினை கலைஞர்களின் கை வண்ணத்துடன், ஓராண்டு உழைப்பில் அழைப்பிதழை மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளார்.
பெட்டியின் முகப்பில் கைவேலைப்பாடு நிறைந்த விநாயகர் சிலை, அதன் மேல் பகுதியில் சிவன், பார்வதியும், கீழ்ப்பகுதியில் மகாலட்சுமி, மகாவிஷ்ணு வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பின் மேற்புறத்தில் 'ஸ்ரீ கணேசாய நமஹ' என்ற மந்திரமும் வெள்ளியில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம், ராமர் பட்டாபிஷேகம், ராதாவுடன் குழலூதும் கண்ணன், அஷ்டலட்சுமி வடிவங்கள், திருவிளக்குகள், மகாவிஷ்ணுவின் தசாவதாரமும் இதில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி மட்டும் இரு வடிவங்களில் அழைப்பிதழில் காட்சி தருகிறார்.
இது குறித்து ஷிவ் ஜோஹ்ரி கூறும் பொழுது, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தான் அளிக்கும் பரிசு பல தலைமுறைக்கு நீடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், ஆறு மாத யோசனைக்குப் பிறகே வெள்ளியில் அழைப்பிதழ் உருவாக்கும் எண்ணம் உருவானதாகவும் கூறினார். இதற்காக உடனடியாக செயலில் இறங்கியதாகவும், உறவினர்கள் மட்டுமின்றி தெய்வங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல தெய்வங்களின் உருவங்களை செதுக்கி, அழைப்பிதழை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகிறார் இந்த பாசக்கார தந்தை.