

இந்தியாவின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் (JJM)2019-ல் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். தற்போது இத்திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டு, கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது, அதற்காக 2025-26 நிதி ஆண்டுக்கு ₹67,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜல் ஜீவன் மிஷன் திட்டம் (Jal Jeevan Mission), கிராமப்புற பெண்களின் சுமையைக் குறைத்து, கிராமப்புற வீடுகளுக்கு நேரடியாக பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை உறுதி செய்வதையும், கை பம்புகள், கிணறுகள் மற்றும் டேங்கர்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற குடும்பங்களுக்கு இலவச குழாய் இணைப்பு சலுகைகள்:
கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் குழாய் போடுவதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. அனைத்து செலவையும் அரசே ஏற்கிறது. அதாவது ஒரு வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு போடுவதற்கு ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2025 நிலவரப்படி 15 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டு, 80% கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் குடிநீர் தரத்தை உறுதி செய்ய, கிராமப்புற பெண்கள் உட்பட 24.8 லட்சம் பேர் கள சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி நீரை சோதிக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
ஜீவன் திட்டம் இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், வட மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.. ஏனென்றால், அந்த மாநிலங்களில்தான், குறைவான தண்ணீர் பயன்பாடு, குடிநீர் வசதி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், தற்போது 1 கோடியே 25 லட்சத்து 26 ஆயிரத்து 665 வீடுகளுக்கு குடிநீருக்கான குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை மாத நிலவரப்படி, 1 கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 65 வீடுகளுக்கு குடிநீருக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.. இது 89.10 சதவீதமாகும்.. இதன் வழியாக, ஒரு நபருக்கு சராசரியாக, தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் தலா, 30 ரூபாய் குடிநீர் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஜல் ஜீவன் மிஷன் 2025-க்கு யார் தகுதியானவர்கள்
இந்தத் திட்டம் முதன்மையாக குழாய் குடிநீர் வசதி இல்லாத கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள், பழங்குடியினர் பகுதிகள் மற்றும் மோசமான நீர் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தகுதியான வீடுகளை அடையாளம் கண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் நிலையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
ஜல் ஜீவன் மிஷன் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://ejalshakti.gov.in/WQMIS/Main/report (jaljeevanmission.gov.in), UMANG App அல்லது உங்கள் மாநிலத்தின் JJM இணையதளங்கள் (எ.கா. UP-க்கு jjm.up.gov.in) ஆகியவற்றிற்குச் சென்று, கிராமப்புற வீட்டு இணைப்பு விவரங்கள் (FHTC status), திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நீர் விநியோக நிலவரங்களை வரைபடங்கள் (Dashboards) மூலம் பார்க்கலாம். இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம், உங்கள் பகுதியில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் முன்னேற்றத்தை வெளிப்படையாக ஆன்லைனில் கண்காணிக்க முடியும்.
இந்தத் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படுகிறது.
ஜல் ஜீவன் மிஷன் 2025, சுத்தமான குடிநீர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றியமைத்து வருகிறது. இலவச குழாய் இணைப்புகள், உயர் மதிப்புள்ள உள்கட்டமைப்பு சலுகைகள் மற்றும் வெளிப்படையான நிலை-சரிபார்ப்பு அமைப்பு மூலம், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக மேம்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் உங்கள் உள்ளூர் நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் சொத்து உரிமைச் சான்று, அடையாள ஆவணங்கள், மற்றும் சமீபத்திய சொத்து வரி ரசீது போன்றவற்றை இணைத்து சமர்பிக்க வேண்டும்.