ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல ஆண்டுகளாகவே பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சமீபக்காலமாக அடிக்கடி தாக்குதல் நடைபெறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதமே இரண்டு முறை பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
முதலில் கோவிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 10 பேர் பலியாகினர். அடுத்த ஒரு வாரக் காலத்திலேயே சாலையில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து தற்போது பயங்கரவாதிகள் பெரிய அளவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பயங்கரவாதிகள் முதலில் குண்டு வீசினர். அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றனர்.
மேலும், சில பகுதிகளில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.