

ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் 1 நாளே உள்ள நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படக்குழுவினர் , சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி நேற்று மனு அளித்துள்ளனர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் ஜன 6 ஆம் தேதி மதியம் 2.15 அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஜனநாயகன் திரைப்படம் , டிசம்பர் 15ஆம் தேதிக்கு தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் , அவர்கள் கூறியவாறு சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்காமல் நீண்ட காலம் இழுத்தடித்து வருகிறது . இதனால் , தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நிதி இழப்பும் ,மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் வெளியாவது தாமதமும் ஏற்படுகிறது. இதனால், உடனடியாக கோர்ட் தலையிட்டு , சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி, திரைப்படக் குழு சார்பில் வக்கீல் வாதத்தினை முன் வைத்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி , தணிக்கைக் குழுவிடம் இருந்து உரிய ஆவணங்களையும், புகார்கள் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். குறிப்பாக நீதிபதி , "படம் ஜனவரி 9-க்குப் பதில் 10-ஆம் தேதி வெளியானால் என்ன?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இன்று மதியம் , ஜனவரி 7ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் உத்தரவின் பேரில் தணிக்கை குழு ஜனநாயகன் திரைப்படத்தின் மீதான தங்களது புகார்களை முன் வைத்தது.
அதற்கு பதில் அளித்த நீதிபதி " தணிக்கை குழு அளித்துள்ள புகார் மனுவில் உள்ள குறைகள் அனைத்தும் , படக் குழுவினரால் ஏற்கனவே சரி செய்யப்பட்டது போல தெரிகிறது. தணிக்கை வாரியம் கூறியபடியே படத்தில் உள்ள சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்த பிறகு U/A சான்றிதழ் அளிக்க முடிவு செய்த பின்னரும் எதற்காக, சென்சார் போர்ட் மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது? என நீதிபதி ஆஷா கேள்வி எழுப்பினார்.
அதற்கு , புகார் மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் நீதிமன்றம் கொடுக்க வேண்டும் , அப்போதுதான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல இயலும், ஒரு படத்தினை மறு தணிக்கை செய்ய சென்சார் போர்ட் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்று சென்சார் போர்டு சார்பாக கூறப்பட்டுள்ளது.
மேலும் , படத்தின் சில காட்சிகளில் மத உணர்வையும் ராணுவத்தையும் புண்படுத்தும் படி எடுத்துள்ளதாக புகார் வந்ததாக தணிக்கை வாரியம் கூறியுள்ளது. சில காட்சிகள் ஆயுதப்படைகளை தவறான கோணத்தில் சித்தரித்துள்ளது. இந்த காரணத்தை வைத்து சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தணிக்கைக் குழு 'U/A' சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்த போதிலும், கடைசி நேரத்தில் ஒரு தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் , படம் மீண்டும் ஒரு மறுபரிசீலனை குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது ,என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முறை தணிக்கை குழுவின் புதிய உறுப்பினர்கள் படத்தினை பார்வையிடுவார்கள் , மறு ஆய்வு இன்னும் திரைப்படத்தை பார்க்கவே இல்லை என்று தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இதைக் கேட்ட நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறை அசாதாரணமாக உள்ளது' என்று தெரிவித்தார்.
ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகாது:
தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் தேவை என்று தணிக்கைக் குழு கோரி உள்ளது.
ஜனநாயகன் மறு ஆய்வுக்கு சென்றது குறித்து படக்குழுவுக்கு தணிக்கை வாரியம் ஏன் தெரிவிக்கவில்லை? என நீதிபதி கேட்க மறுதணிக்கைக்கு அனுப்பபட்ட செய்தி படக்குழுவுக்கு ஜன.5ல் தெரிவிக்கப்பட்டது என தகவல்.
இதனால் , ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதிக்கு திரைக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.