

கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்" திரைப்படம் சட்ட விரோதமாக ஆன்லைனில் வெளியானது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வேண்டிய அந்த திரைப்படம் , தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் அதன் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.
படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றன. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் தாமதமானது. இந்த சூழலில் முழு ஜனநாயகன் திரைப்படமும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியானது.
ஆரம்பத்திலிருந்தே ஜனநாயகன் திரைப்படத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருந்த நிலையில் , முழு படமும் வெளியானது படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் விசாரணையின் அடிப்படையில், ஜனநாயகன் திரைப்படத்தின் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டர் உள்பட இதுவரை 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படத்தின் இணைய கசிவிற்கு , ஜனநாயகன் திரைப்பட எடிட்டர் பிரதீப் E.ராகவ் முக்கிய காரணம் இல்லை என்றாலும் , அவரது கவனக்குறைவு ஒரு குற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் , தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் , சங்க விதிகளை மீறி , சங்கத்தில் இல்லாத தொகுப்பாளரை படத்தில் பணியாற்ற வைத்ததற்காக பிரதீப் ராகவ்வை தங்களது சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது .
இந்த இடைநீக்க காலத்தில் பிரதீப் ராகவிற்கு சங்கத்தின் சார்பில் எந்த ஒரு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்றும் , இதற்கு சகோதர சங்கங்கள் முழு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.