

ஒரே நேரத்தில் பல பக்கங்களிலிருந்து சோதனைகள் வந்தால் ஒரு மனிதரால் என்ன செய்ய முடியும்? நடிகர் விஜய்யின் தற்போதைய நிலை இதுதான். ஒரு பக்கம் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை, மறுபுறம் கோடிக்கணக்கான முதலீட்டில் உருவான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் சிக்கல் என அவர் இக்கட்டான நிலையில் உள்ளார்.
தற்போதைய சூழலில் ஜனநாயகன் எப்போது ரிலீசாகும் என்ற குழப்பம் மேலும் நீடித்து வருகிறது. முதலில் ஜனவரி 5-ந்தேதிக்குள் படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைத்து விடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வெளியீட்டு தேதி மற்றும் ப்ரமோஷன் பணிகள் நடந்தன. ஆனால நடந்தது வேறு. காலதாமதமான தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளால் தயாரிப்பாளர்கள் சட்ட ரீதியாக சென்னை நீதிமன்றத்தை அணுகினர். பின் ஜனவரி 7-ந்தேதி வரவேண்டிய தீர்ப்பு ஜனவரி 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.தொடர்ந்து பட வெளியீடு ஆவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலகநாடுகள் உள்பட 39-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவிலும் அறிவிக்கப்பட்ட 9-ந்தேதி படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 9-ந்தேதி ஐகோர்ட்டில் சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டு தயாரிப்பாளர்களுக்கு சாதகம் தரும் வகையிலான தீர்ப்பு வெளியானது. அடுத்த சில மணிநேரத்தில் அந்த உத்தரவுக்கு எதிராக மத்திய தணிக்கை வாரியம் ரிட் மனு தாக்கல் செய்து பட ரிலீசில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.அடுத்த கட்ட விசாரணை வருகிற 21-ந்தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்தினர் வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டு முடிவு செய்து சுப்ரீம் கோர்ட்டை இன்று (12-ந்தேதி) அணுகுவது என கே.வி.என். புரொடக்சன்ஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஒருவேளை 21-ஆம் தேதி சாதகமான முடிவு கிடைத்து, குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 23-ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டாலும், அங்கு மற்றுமொரு சிக்கல் காத்திருக்கிறது.
தணிக்கை சான்றிதழ் பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் பட ரிலீஸ் ஆவதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வராத நிலையிலேயே இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. காரணம் சான்றிதழ் விசாரணை மீதான இந்த தாமதத்திற்கு இடையே தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டால் தேர்தலுக்கான நன்னடத்தை விதிகளை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில்த.வெ.க. தலைவர் விஜய் அவற்றை மீறமுடியாது.குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக வாக்காளர்களிடம் ஜனநாயகன் படம் மூலம் தாக்கம் ஏற்படுத்த கூடும் என்ற நிலையை தேர்தல் ஆணையம் அறிந்தால் உடனடியாக பட வெளியீட்டை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ அதிகாரம் பெற்று விடும். இதனால் மேலும் காலதாமதம் ஏற்பட்டு பட ரிலீசில் பெரிய சிக்கலை உண்டாக்கும் வாய்ப்புகளும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஜனவரி 21-ந்தேதி பட ரிலீசுக்கான தீர்வை பட தயாரிப்பாளர்கள் பெற்று விட்டால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தடைகளைத் தாண்டி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? ஜனவரி 23ல் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.