

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தின் போது சிறிய இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. அந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசத் தொடங்கிய போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணமடைந்தனர். இது தொடர்பாக தமிழக காவல்துறை தொடங்கிய விசாரணையில் நம்பிக்கை இல்லை , என்று தவெக கட்சி நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரியது. அதன் பின்னர் சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் தவெக நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் வாக்குமூலங்களை சிபிஐ பெற்றனர். பின்னர் விஜயை நேரில் ஆஜராகக் கூறி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன் படி இன்று காலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். அவருடன் ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா , நிர்மல் குமார், விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி , ராஜ்மோகன் , நயீம் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு செல்லும் முன்பு , கருப்பு உடை அணிந்திருந்த விஜய், மகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு கையசைத்து சென்றார். மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு பெற்றுள்ள விஜய்க்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. லோதி சாலையில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்திற்கும் , ரசிகர்கள் நுழைய முடியாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது , மீடியாக்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக சிபிஐ அதிகாரிகள் கேள்விகளில் என்ன இருக்கும் என்பது வெளியில் உள்ள யாருக்கும் தெரியாது. ஆனாலும், அவர்கள் 35 லிருந்து 57 கேள்விகளை விஜயிடம் கேட்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. சிபிஐ அலுவலகத்தின் உள்ளே விஜய்யிடம் விசாரணை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு விஜய் நன்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகாரிகளின் கேள்விக்கு அவர் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார் , ஒரு சில கேள்விகளுக்கு பதிலை விஜய்யிடம் எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டு இருக்கின்றனர்.
விசாரணை தொடங்கிய உடனே சில அதிரடியான கேள்விகளை விஜயிடம் கேட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கேள்வியாக , காலையில் கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு காலையில் வருவதாக அறிவித்துவிட்டு இரவு வரை மக்களை காக்க வைத்து, தாமதமாக வந்தது ஏன்? என்று கேட்டுள்ளனர். அடுத்ததாக " ஒரு திறந்த வாகனத்தில் ,வெளியில் இருக்கும் அனைவரும் தெரியும்படியான நிலையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நீங்கள், மக்கள் கூட்டத்தில் மயங்கி விழுவதை பார்த்தும் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தது ஏன்? என்றும் கேள்வியை எழுப்பி உள்ளனர்.
கேள்விகளின் தொடர்ச்சியாக , மக்கள் மயங்கி விழுவதை பார்த்த நீங்கள் , தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசிக்கொண்டிருந்தீர்கள். அப்போது நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கும் , அப்படி இருந்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த மூன்று கேள்விகளும் விஜய்க்கு கடுமையான நெருக்கடியை அளித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் கரூர் பிரச்சார கூட்டத்தில் , திட்டமிடல் , காவல் துறையின் செயல்பாடுகள் , கூட்டத்தை கட்டுப்படுத்த பின்பறறிய விதிகள் , பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதில்
தவெக கட்சியினர் காட்டிய அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த அளவுக்கு கூட்டம் அதிகமாக கூடும் என்பதை தெரிந்தும் அவசரமாக கால மேலாண்மைக்கான எந்த ஒரு ஏற்படும் செய்யாதது பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகிறது. இந்த விசாரணை இன்று இரவு ஏழு மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.