ஜனநாயகன் பட வழக்கில் அதிரடி திருப்பம் - வழக்கு தள்ளுபடி..!

Jana Nayagan
Jana Nayagan
Published on

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்', பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions), படத்திற்குச் சான்று வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அப்போது, தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தயாரிப்பு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில், தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பி.டி. ஆஷா முன்பு பிறப்பித்த உத்தரவிற்குத் தடை விதித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து தொடங்கி புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு தீர்ப்பளித்தது.

இதனால் இவ்வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாகப் படக்குழு அதிரடி முடிவு எடுத்தது. இது தொடர்பாக 'ஜனநாயகன்' படக்குழு தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாபஸ் கடிதம் அளித்தார். தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றதால், மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் 'ஜனநாயகன்' ரிலீஸ் விவகாரத்தில் விரைவில் ஒரு சுமுகமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி இதற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.! வெளியானது வருமான வரி புது விதிகள்.!
Jana Nayagan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com