

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இன்று வெளியாக வேண்டிய நிலையில் இருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினையால் வெளியாக முடியாமல் ரசிகர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.படக்குழுவினரின் வாதங்கள் மற்றும் புகார் அளித்த தணிக்கை வாரிய உறுப்பினரின் வாதங்கள் என கடந்த சில நாட்களாக ஜனநாயகன் குறித்த பல செய்திகள் வைரலாகி வந்த நிலையில் இன்று இந்த படத்தின் சான்றிதழ் குறித்த பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது .
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் இரு தரப்பினரின் வாதங்கள் விவாதங்களைக் கேட்ட பிறகு ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கினார். அத்துடன் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கவும் பிடி ஆஷா உத்தரவு அளித்துள்ளார்.
மேலும், தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தணிக்கைக் குழுவில் இருந்த ஒரு உறுப்பினர் அளித்த புகாரை ஏற்க முடியாது என்றும் நீதிபதி ஆஷா குறிப்பிட்டுள்ளார். தணிக்கைக் குழுவின் திருத்தங்களை 'ஜனநாயகன்' திரைப்படக் குழு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, "ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும், ஆவணங்களை ஆய்வு செய்தபோது புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது புலனாகிறது என்றும், இதனால் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் (Censor Board) செயல் ஏற்கத்தக்கது அல்ல என்றும் நீதிபதி சாடினார். உடனடியாகத் தணிக்கை வாரியம் படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாகக் கருதப்படுகிறது. படம் இன்று வெளியாக வேண்டிய சூழலில், தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதியின் இந்தத் தீர்ப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் நிச்சயமாகப் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்பதால், ரசிகர்கள் தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சற்று முன் வந்த தகவலின்படி,சென்சார் போர்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது..
ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி. தணிக்கை வாரிய தலைவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜனநாயகன் நாளை வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தொடர் சிக்கலில் நீடிப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.