குட் நியூஸ்..! உடைந்த எலும்பை விரைவில் குணமாக்கும் புதிய ஜப்பான் சிகிச்சை..!

Stem cell therapy regenerating spinal bone fractures
Japanese researchers heal broken bones using stem cells
Published on

உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, அது சரியாகக் கூட பல மாதங்கள் ஆகுமோ என்ற கவலை உள்ளதா? அல்லது வயது காரணமாக எலும்புகள் பலவீனமாகி (ஆஸ்டியோபோரோசிஸ்), சிறிய அடி விழுந்தால்கூட முதுகெலும்பில் முறிவு ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறதா?

இனி கவலை வேண்டாம். ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு புதிய சிகிச்சை முறை, உடைந்த எலும்புகளை விரைவில், மிகச் சிறப்பாகச் சீராக்கும் புதிய நம்பிக்கைக் கதவைத் திறந்து வைத்துள்ளது.

கொழுப்புத் திசுக்களில் ஒளிந்திருக்கும் மருந்து

ஜப்பானின் ஒசாகா பெருநகரப் பல்கலைக்கழக (Osaka Metropolitan University) ஆராய்ச்சியாளர்கள், உடலின் கொழுப்புத் திசுக்களில் (Fatty Tissue) இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் (Stem Cells) பயன்படுத்தி, எலிகளின் முதுகெலும்பு முறிவுகளை வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளனர்.

இந்த முறையின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • எளிமையான சேகரிப்பு: இந்த செல்களை முதியவர்களிடமிருந்து கூட எளிதாகச் சேகரிக்க முடியும்.

  • பக்க விளைவு குறைவு: இது உடலுக்குச் சிறிய அழுத்தமே கொடுக்கிறது, எனவே இது ஒரு ஆபத்து குறைவான (Non-invasive) சிகிச்சை முறையாக அமையும் என்று நம்பப்படுகிறது.

ஏன் இந்தச் சிகிச்சை முக்கியம்?

வயது காரணமாக எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் உடையும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்பது ஒரு தீவிரப் பிரச்சினையாகும்.

இதில், முதுகெலும்பில் ஏற்படும் முறிவுகள் மிகவும் பொதுவானவை. இந்த முறிவுகள் நீண்ட கால பராமரிப்புக்கு வழிவகுத்து, வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன.

இந்த நிலையில், உடைந்த எலும்புகளைச் சீக்கிரமே குணமாக்க இந்தச் சிகிச்சைத் தேவைப்படுகிறது.

சிகிச்சை செயல்முறை: எப்படி எலும்பு மீட்கப்படுகிறது?

ஸ்டெம் செல்கள் என்பவை எலும்பு செல்கள் உட்படப் பல வகைகளாக மாறக்கூடிய சக்தி கொண்டவை.

ஆய்வாளர்கள் இந்தப் புதிய சிகிச்சைக்குப் பின்வரும் நுட்பத்தைக் கையாண்டனர்:

  1. செல்களை வளர்த்தல்: கொழுப்புத் திசுக்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்தச் செல்கள், முதலில் எலும்பாக மாறும் தன்மை கொண்ட முப்பரிமாண கோளக் கட்டிகளாக (Bone-differentiated spheroids) வளர்க்கப்பட்டன.

  2. பொருத்துதல்: பின்னர், உடைந்த எலும்பை ஒட்ட வைக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளுடன் (பீட்டா-ட்ரிகால்சியம் பாஸ்பேட்) இந்தக் கோளங்களைச் சேர்த்து எலிகளின் முதுகெலும்பு முறிவுகளில் சிகிச்சை அளித்தனர்.

முடிவு ஆச்சரியமளிக்கிறது:

சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளில், எலும்பு மீண்டும் உருவாவதும் (Regeneration), அதன் பலமும் (Strength) கணிசமாக மேம்பட்டன.

அதாவது, உடைந்த எலும்பு மிகச் சிறப்பாகச் சீராகி, வலிமையடைந்தது. எலும்பு உருவாக்கத்தில் ஈடுபடும் மரபணுக்களும் (Genes) இந்தச் சிகிச்சையால் தூண்டப்பட்டன.

இந்த ஆய்வு முடிவுகள் 'Bone and Joint Research' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

நம்பிக்கை தரும் எதிர்காலம்

மருத்துவப் பட்டதாரிப் பள்ளியின் மாணவரான யூட்டா சவாடா கூறுகையில், "இந்த ஆய்வு, முதுகெலும்பு முறிவுகளுக்குப் புதிய சிகிச்சைகளை உருவாக்குவதற்கான ADSCs (கொழுப்புத் திசு ஸ்டெம் செல்கள்) பயன்படுத்தும் எலும்பு வேறுபடுத்தும் கோளங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.

"கொழுப்பு செல்களிலிருந்து பெறுவதால், இது நோயாளியின் உடலுக்கு மிகக் குறைவான சுமையையே அளிக்கிறது. இந்த எளிய மற்றும் பயனுள்ள முறை, குணப்படுத்துவது கடினமான முறிவுகளுக்கு கூடச் சிகிச்சை அளிக்க உதவும்" என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷின்ஜி தகாஹாஷி மேலும் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
மனித உடலில் தாக்கங்களை ஏற்படுத்தும் புவி ஈர்ப்பு விசை - பூமியிலும் விண்வெளியிலும்!
Stem cell therapy regenerating spinal bone fractures

எலும்பு முறிவு குணமாகத் தாமதமாகிறதே என்று கவலைப்படுவோர், இனி கவலைப்படத் தேவையில்லை. இந்த புதிய சிகிச்சை முறை, நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com