ஜப்பானில் இஷிகாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதே ஜப்பான் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் நீர் உள்ளே வரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜப்பான் ஊடகங்களில் “கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோயாமா, நிகாடா, இஷிகாவா ஆகிய மாகாணங்களில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றும் பணியில் அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக கடல் நீர் ஊருக்குள் புகத் தொடங்கியுள்ளதால் ஜப்பான் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாமி எச்சரிக்கை ஜப்பான் மட்டுமின்றி செர்பியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பொதுவாக கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்படும்போது, டெக்கானிக் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதி மேலெழுந்தால் பெரிய அளவில் சுனாமி அலைகள் உருவாகும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 7 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படலாம் என ஜப்பான் வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே கடலோரத்தில் வாழும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு சென்றுவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்களுக்கு பயம் ஏற்படத்தான் செய்யும். நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் கட்டிடங்களும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
சுனாமி குறித்த எச்சரிக்கை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.