
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இருக்கும் செயற்கை தீவில் கன்சாய் என்ற சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் கடல் பரப்பின் மீது அமைப்பட்டுள்ளதால் பொறியியல் உலகில் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. கடல் பரப்பின் மீது விமான ஓடுதளத்தை நிறுவுவதற்கு பொறியாளர்கள் களிமண்ணை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த விமான நிலையம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கன்சாய் விமான நிலையத்தின் கட்டுமானம், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் முடிவடைந்தது. நீண்ட காலத்திற்கு தாக்குபிடிக்கும் படியாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம் தற்போது, எதிர்பார்த்ததற்கு முன்பாகவே கடலில் மூழ்கத் தொடங்கியிருப்பது பொறியாளர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போது கன்சாய் விமான நிலையம் 45 அடியும், செயற்கை தீவின் மேற்பரப்பு 13 அடியும் கடலில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் விமான நிலையத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சூறாவளி, புயலைத் தாங்கும் தன்மை குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதனால் பயணியர்களின் பாதுகாப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம், கடல் மட்டம் அதிகரித்தல் மற்றும் மிகப்பெரும் எடையை களிமண் தளத்தால் தாங்க முடியாத நிலை போன்ற காரணங்களால் தான் விமான நிலையம் தற்போது மூழ்கத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிதக்கும் ஏர்போர்ட் என அழைக்கப்படும் கன்சாய் விமான நிலையம், விரைவிலேயே பலமாக கட்டமைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் பொறியியல் அதிசயத்தைப் பாதுகாக்க தற்போது பொறியாளர்கள் விமான நிலையத்தை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடலின் கரைப்பகுதிகளில் சுவர் எழுப்பி பலப்படுத்தவும், அடியில் இருந்து வரும் தண்ணீரின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு செங்குத்து மணல் வடிகால்களை நிறுவவும் ஜப்பான் அரசு ரூ.1,280 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் எந்த பயணியரின் உடைமையும் காணாமல் போனதில்லை என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது கன்சாய் விமான நிலையம். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3 கோடி பயணியர்களை இந்த விமான நிலையம் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வரும் இந்த விமான நிலையத்தை முழு பலத்துடன் மீட்டெடுக்க ஜப்பான் முழுமுயற்சியையும் எடுத்து வருகிறது.