உலகளவிலான வர்த்தகச் சந்தையில் டாலர் தான் மதிப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. டாலருக்குப் போட்டியாக பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வர பிரிக்ஸ் நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் வர்த்தகச் சந்தையில் எப்போதும் "டாலர் தான் கிங்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு டாலருக்கு எதிராக செயல்பட நினைக்கும் பிரிக்ஸ் நாடுகள் 10% வரிவிதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நிறுவன நாடுகள் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பின் முதன்மை உறுப்பினர்கள். இந்த அமைப்பில் தற்போது ஈரான், எகிப்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளும் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், மீண்டும் பிரிக்ஸ் கரன்சி பற்றி பேசப்பட்டது.
உலகளவில் 39% உற்பத்தியைக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் நாடுகள் 2023 இல் டாலருக்கு எதிராக பிரிக்ஸ் கரன்சியைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை முன்வைத்தன. அப்போதே ட்ரம்ப் இதனை எதிர்த்து குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் பிரிக்ஸ் கரன்சி பேசுபொருளான நிலையில், டாலருக்கு நிகர் எதுவும் இல்லை என ட்ரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய ட்ரம்ப், “அமெரிக்க டாலரை ஓரங்கட்டவே பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வரும் எண்ணம் யாருக்கும் இருக்கவே கூடாது. டாலருக்கு எதிராக செயல்படும் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் 10% வரிவிதிப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். வர்த்தக உலகில் டாலர் தான் கிங்; டாலருக்கென்று ஒரு தரம் இருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிடம் விளையாட்டு காட்டுகின்றன. ஆனால் எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும். இதற்காக பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பல நாடுகள் பிரிந்து தனியே சென்று விட்டன. தற்போது ஓரிரு நாடுகள் தான் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வரும் எண்ணத்தோடு கூட்டாக சுற்றிக் கொண்டிருக்கின்றன. டாலரை எதிர்க்கும் எண்ணம் இனி யாருக்கும் தோன்றவே கூடாது” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.