

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து தவெக ஆட்சிக்கு வந்து விட்டாலும் இன்னும் தமிழக அரசியலில் பரபரப்பு குறையவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக தவெக 107 இடங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 21 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . ஏற்கனவே காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தந்ததால் தவெக அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவாளர்கள் என கட்சிக்குள் இரு பிரிவினராக தங்கள் நிலை குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிவித்து வந்தனர்.மேலும் தவெக அமைச்சரவையில் தங்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து அக்கட்சிக்கு ஆதரவளித்த அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் இல்லாதது பெரும் அதிர்ச்சியை தந்தது. கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு தந்த 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் எடுக்கப்படுமா என்ற கருத்துக்களும் நிலவி வந்தது.
சமீபத்தில் அதிமுகவின் இசக்கி சுப்பையா ,மரகதம் குமரவேல் , சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் தங்கள் MLA பதவிகளை ராஜினாமா செய்து அதிமுக விலிருந்து விலகி தவெகவில் இணைந்தது மேலும் பரபரப்பை தந்தது. அதிமுகவினர் தவெகவில் இணையும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது போன்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதும் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இனி அதிமுகவின் நிலை என்ன என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் இடையே ஒரு வித பதற்றம் இருந்து வந்தது.
இதனிடையில்,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரு தரப்பினரையும் இணைக்க முயற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பேசியுள்ளார். 21 எம்எல்ஏக்கள் வருத்தம் தெரிவித்து கடிதங்கள் அனுப்பியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் பேசியதிலிருந்து..
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவரான எனக்கு நான்கு கடிதங்கள் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்களை முழுமையாக படித்து தீவிரமாக பரிசீலித்தேன்.
சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் இபிஎஸ்க்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். எம்எல்ஏக்கள் 21 பேர் வருத்தம் தெரிவித்திருந்த அந்த கடிதங்களை எனக்கு அனுப்பி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.சட்டப்பேரவை விதிகளின் படியே அதிமுக சார்பில் கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளன அதேபோல் அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதங்கள் சட்டப்பேரவை விதிகளின்படி ஏற்கப்பட்டுள்ளன.21 எம்எல்ஏக்களுக்கு எந்த தகுதி இழப்பும் ஏற்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமியின் கடிதங்களில் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர் தாம் தெரிவித்த 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.21 பேரின் மன்னிப்பு கோரிக்கைகளை ஏற்பதால் அவர்களுக்கு தகுதி இழப்பு ஏற்படவில்லை. மேலும் 21 உறுப்பினர்களுக்கு எதிரான மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. சட்ட விதிகளின்படியே அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையா ,மரகதம் குமரவேல் ,சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகி நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை கருத்தில் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை துவங்கியுள்ளது .நான்கு பேர் ராஜினாமா செய்திருந்தாலும் விதிகளின்படி நடவடிக்கை துவங்கியுள்ளது. அது குறித்த விபரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினார் சபாநாயகர்.
இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை மற்றும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் அவர்களது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தவெகவிற்கு ஆதரவளித்த எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் , சி. விஜயபாஸ்கரின் எம்.எல்.ஏ பதவி அதே எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டதால் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்டமன்ற வாக்கெடுப்பின்போது அதிமுக உறுப்பினர்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது செல்லும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.