
JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் 2025: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கான்பூர் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அட்வான்ஸ்டு 2025 முடிவுகளை இன்று ஜூன் 2 அன்று அறிவித்தது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் jeeadv.ac.in இல் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். முடிவுகளுடன், நிறுவனம் இறுதி விடைக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
ஐஐடி கான்பூர், மே 18 ஞாயிற்றுக்கிழமை, ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்தியது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தாள் 1 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், தாள் 2 பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெற்றது.
இந்த ஆண்டு JEE அட்வான்ஸ்டுக்கு மொத்தம் 187223 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வை நடத்திய பிறகு, நிறுவனம் வினாத்தாள்கள் மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது.
இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகளுடன், ஐஐடி கான்பூர் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதலிடம் பிடித்தவர்களின் பெயர்களையும் கட்-ஆஃப் மதிப்பெண்களையும் அறிவித்தது.
ரஜித் குப்தா முதலிடம்:
தகுதிப் பட்டியலில் ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா முன்னிலை வகிக்கிறார், அவர் அகில இந்திய தரவரிசை (AIR) 1 மற்றும் 360க்கு 332 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். தேவ்தத்தா மஜ்ஹி AIR 16 மதிப்பெண்களுடன் பெண்களுக்கான முதலிடத்தை பிடித்தார். மண்டல வாரியாக, ஐஐடி ஹைதராபாத் அதிக எண்ணிக்கையிலான தகுதி பெற்ற மாணவர்களுடன் முதலிடத்தில் இருந்தது, 12,946 மாணவர்கள் தகுதி பெற்றனர். அதே நேரத்தில் ஐஐடி டெல்லி 11,370 தகுதி பெற்ற மாணவர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்த ஆண்டு ஐஐடி சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் 54,378 பேர் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தகுதி பெற்றவர்களில் 9404 பேர் பெண்கள் என்பது குறிப்படத் தக்கது. இந்த ஆண்டு தேர்வுக்கு பதிவு செய்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,87,223 பேர், இவர்களில் 1,80,442 பேர் 1 மற்றும் 2 தாள்களுக்கும் விண்ணப்பித்திருந்தனர்.
JEE அட்வான்ஸ்டு 2025 கட்ஆஃப்-ல் சென்ற ஆண்டை விட 35 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஒவ்வொரு பாடத்திலும் ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் JEE Advanced கட்ஆஃப் மார்க் குறைக்க பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் சேர்ப்பதற்கான JEE Advanced 2025 கட்ஆஃப் மதிப்பெண்கள்:
பொதுவான தரவரிசைப் பட்டியலுக்கு 20.56%. GEN-EWS தரவரிசைப் பட்டியல் மற்றும் OBC-NCL தரவரிசைப் பட்டியலுக்கு 18.50%. அனைத்துப் பிரிவுகளிலும் SC, ST மற்றும் PwD தரவரிசைப் பட்டியல்களுக்கு 10.28%. மற்றும் தயாரிப்பு பாடத் தரவரிசைப் பட்டியல்களுக்கு 5.14%. 2024 ஆம் ஆண்டில், கட்ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் கட்ஆஃப் சதவீதம் இதைவிட அதிகமாக இருந்தது.
பொதுவான தரவரிசைப் பட்டியலின் கட்ஆஃப் 30.34% ஆகவும்; GEN-EWS தரவரிசைப் பட்டியல் மற்றும் OBC-NCL தரவரிசைப் பட்டியலுக்கு 27.30% ஆகவும்; அனைத்துப் பிரிவுகளிலும் SC, ST மற்றும் PwD தரவரிசைப் பட்டியல்களுக்கு 15.17% ஆகவும்; மற்றும் தயாரிப்பு பாடத் தரவரிசைப் பட்டியல்களுக்கு 7.58% ஆகவும் இருந்தது.
அடுத்து, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஐஐடி சேர்க்கைக்கான ஜோசா கவுன்சிலிங் செயல்பாட்டில் பங்கேற்கலாம், இதற்கான பதிவுகள் நாளை, ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும்.