இந்தியாவில் நெட்ஃப்லிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோக்களை பின்னுக்குத் தள்ளி ஜியோ ஹாட்ஸ்டார் அதிக சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது.
முதலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டராக இருந்தபோது , அந்த ஓடிடி நெட்ஃப்லிக்ஸ் மற்றும் பிரைமுக்கு இணையான வரவேற்பை பெற்றது. ஆனால், டிஸ்னி நிறுவனம் தனது இந்திய சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (RIL) விற்ற பிறகு, இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களின் இணைப்பு இறுதி செய்யப்பட்டது. இது ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் கூட்டு முயற்சியாக இருந்தது.
இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்று அழைக்கப்படும் இந்த புதிய தளமானது இந்தியாவில் ஸ்ட்ரீமிங் பிஸினஸையே மாற்றும் வகையில் உள்ளது. இந்த தளத்தின் தலைவர் நிதா எம். அம்பானி ஆவார். ஜியோ ஹாட்ஸ்டாரின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் மணி. இவர்தான் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது 100 மில்லியன் பேர் காசு கட்டி ஜியோ ஹாட்ஸ்டாரைப் பார்க்கிறார்கள் என்றும், இது இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை வழங்குவதற்கான தளத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த தளம் ஸ்ட்ரீமிங் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களை விஞ்சியுள்ளது. மேலும் லாபம் ஈட்ட கஷ்டப்படும் சில தளங்களை கையகப்படுத்துவதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் மேலும் விரிவடையும் நிலையில் உள்ளது.
ஆனாலும், போட்டி நிறைந்த இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தையில் ஜியோ ஹாட்ஸ்டார் பல சவால்களை எதிர்க்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, யூசர் ஈடுபாடு இல்லாமல் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பது அதன் சந்தாதாரர் தளத்தை மேலும் வளர்ப்பதற்கான திறனைத் தடுக்கக்கூடும் என்றனர்.
இதனால், அந்த யூசர் ஈடுபாட்டிற்கு மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இப்போதைக்கு அனைத்து தளங்களையும் விட ஜியோ ஹாட்ஸ்டார் முன்னோக்கி இருந்தாலும், சில முன்னெச்சரிக்கைகளையும் திட்டங்களையும் வகுத்தால் மட்டுமே இந்த நிலையில் தொடர முடியும்.