நம்பிக்கையே பிரார்த்தனையின் வெற்றி!

Faith is the victory of prayer!
Lifestyle articles
Published on

லகிலுள்ள எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒன்று, பிரார்த்தனை. என்னதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும், மனிதன் இன்னும் பிரார்த்தனைகளில் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. 

நம் வாழ்க்கையில் கூட சில சமயங்களில் அப்படிப்பட்ட அற்புதமான நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு. என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கும் நிர்க்கதியான நிலையில், யாரோ அனுப்பி வைத்ததுபோல நமக்கு உதவி செய்ய ஒருவர் வருவதுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில், கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து விட்டதாக நாம் மகிழ்கிறோம்.

பிரார்த்தனைகளின்போது நடப்பது என்ன? அவை நிறைவேறுவது எதைப்பொறுத்தது? தெய்வத்தின் சக்தியாலா? அப்படியெனில், ஒரே தெய்வத்திடம் இரண்டு பேர் பிரார்த்தனை செய்யும் போது, ஒன்று பலிக்கவும், ஒன்று பலிக்காமல் போகவும் நேரிடுவது ஏன்?  ஒரே இடத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளில் சில நிறைவேறுவதில்லையே?

இந்த கேள்விகளுக்கு எல்லா மதங்களும் கூறும் ஒரே விடை: நம்பிக்கை அல்லது விசுவாசம். இதுதான் காலங்களைக் கடந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அற்புதத்தைச் செய்து வருகிறது.

 நம்பிக்கைதான் ஆழ்மனத்தைத் தூண்டக்கூடிய ஒரே சக்தி. பிரார்த்தனைகள் நிறைவேற நம்பிக்கையோடு பொறுமையும் மிகவும் அவசியமாகின்றது. ஏனெனில், நாம் ஒன்றை வேண்டியவுடன், அது நிறைவேறும் என்ற நம்பிக்கை கொள்கிறோம். அது உடனே நடக்காவிட்டால், நம்பிக்கையை இழக்கத் தொடங்குகிறோம். “ஒருவேளை நடக்காமல் போய் விடுமோ?“ என்ற அச்சம் வரத்தொடங்கியவுடன், அது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் சரியத் தொடங்குகின்றன. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தில்லாலங்கடி!
Faith is the victory of prayer!

“நடக்கும்“ என்ற எண்ணத்திலிருந்து சற்றும் பிசகாமல் காத்திருப்பவர் இறுதியில் நடக்கக் காண்கிறார். நம்பிக்கையின் தீவிரத்திற்கு ஏற்ப, அது நிறைவேறுவதற்கான கால அளவு வேறுபடும்.

“ஆழ்மனத்தின் அற்புத சக்தி“ என்ற புத்தகத்தை எழுதிய ஜோஸஃப் மர்ஃபி என்ற எழுத்தாளர் தன் புத்தகத்தில் விவரிக்கும் ஒரு சம்பவத்தை இங்குக் குறிப்பிடுகிறேன். வட ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில், காசநோயால் துன்புற்ற ஒரு வயதான தந்தைக்கு, ஒரு அன்பான மகன் இருந்தார். அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு புகழ் பெற்ற புனிதத் தலத்தில் ஒரு துறவியைக் கண்டார். அந்தத்துறவி அணிந்திருந்த மோதிரத்தில், யேசு க்றிஸ்து அறையப்பட்ட சிலுவைலிருந்து உடைந்த சிறு மரத்துண்டு பதிக்கப் பட்டிருந்ததாகவும், அந்த மோதிரத்தைத் தொட்டவர்கள் அனைவருக்கும் அற்புதமான முறையில் நோய்கள் குணமாவதாகவும் அறிந்தார். தன் தந்தையின் காசநோயைத் தீர்க்க, அந்த மோதிரத்தைப் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.

வீட்டிற்குச் சென்றவுடன், அந்த மோதிரத்தின் பெருமைகளைச் சொல்லி, அதை மிகுந்த விலை கொடுத்து அந்தத் துறவியிடம் தான் வாங்கியதாக் கூறித் தந்தையிடம் கொடுத்தார். அளவற்ற மகிழ்ச்சியடைந்த தந்தை, அந்த மோதிரத்தை ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொண்டு, கடவுளை வேண்டியபடியே சென்று படுத்து உறங்கினார். அடுத்த நாள் காலை அவர் மருத்துவ உலகமே அதிசயிக்கும் வண்ணம் குணமடைந்திருந்தார். அவருக்கு அந்த நோய் இருந்ததற்கான அறிகுறியே உடலில் இல்லாமல் போனது. மோதிரத்தின் சக்தியில் அவர் வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஆனால் மோதிரம் பொய்தான் என்பது அவருக்குத் தெரியாது. 

ஆம். துறவியிடம் இருந்து மோதிரத்தை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்று அறிந்து கொண்ட அவரது மகன், தானே அது போன்ற ஒரு மோதிரத்தைத் தயாரித்துக் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த மோதிரமும் அவர் எதிர்பார்த்த அற்புதத்தை நடத்திவிட்டது. உண்மையில் அற்புதத்தை நடத்தியது எது? அந்தப் பெரியவரின் நம்பிக்கை. உண்மை தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் குணமாகியிருக்க மாட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; அமெரிக்கா அத்தை!
Faith is the victory of prayer!

இதுபோல் ஒன்றல்ல… நூற்றுக்கணக்கான அற்புதங்களை அன்றாடம் பார்க்கலாம். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. உங்கள் இஷ்ட தெய்வம் யாராக இருந்தாலும் சரி. உங்கள் பிரார்த்தனையோடு நம்பிக்கையும் பொறுமையும் சேருமானால், நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறும்.

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்

எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்

– என்று இராமலிங்க வள்ளலார் சிலாகிக்கும் அந்த தெய்வம், உங்கள் ஆழ்மனத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்த தெய்வமேயன்றி வேறில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக, மனிதன் வெளியில் தேடி அலையும் அனைத்தையும், அவன் உள்ளே கண்டு உணர்ந்துவிட்டால், பின்பு அவனை வெல்லவே உலகில் யாருமில்லை.

-த. வேல்முருகன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com