

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய விதிமுறைகள் (July 1 New Rules) மாறவுள்ளன. சிலிண்டர் மானியம் முதல் ரெயில்வே அபராதங்கள் மற்றும் சமையல் சிலிண்டர் விலை வரை, மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் பல மாற்றங்கள் இதில் அடங்கும். இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் நிதிநிலை, பயணம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சிலிண்டர் விலை :
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை அறிவித்து வருகின்றன. மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையின் மாற்றங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக எல்பிஜி விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
கடந்த ஜூன் 1-ம் தேதி, வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.45.50 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.928.50-ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர், ஜூன் 7-ம்தேதி ரூ.29 உயர்த்தப்பட்டு ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.
இதனால், ஜூலை 1-ம்தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் மத்திய அரசின் ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு என்ற கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வீட்டுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு இணைப்பை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் எல்ஜிபி சிலிண்டரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம் :
EPFO 3.0 தளம் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது EPFO-வின் டிஜிட்டல் சேவைகளை முன்னெப்போதையும் விட எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய அமைப்பின் கீழ், EPF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மூலம் தங்கள் PF பணத்தை உடனடியாக எடுக்க முடியும். இது நடந்தால், PF பணம் எடுக்கும் செயல்முறை முன்பை விட மிகவும் வேகமாகவும் எளிதாகவும் மாறும்.
சிலிண்டர் மானியம் பெற இ-KYC கட்டாயம் :
மத்திய அரசின் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் மானியம், தடையின்றி உங்கள் வங்கிக் கணக்கிற்கு வர ஆதார் அடிப்படையிலான இ-KYC (e-KYC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா பயனர்களுக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 300 வரை மானியம் வழங்கப்படுகிறது. மானியம் தொடர்ந்து கிடைக்க, சம்பந்தப்பட்ட நுகர்வோர் வரும் ஜூன் 30-ம்தேதிக்குள் இ-KYC செயல்முறையை முடிக்க வேண்டும்.
பிஎம் கிசான் திட்டத்தில் இ-கேஒய்சி முடிக்க வேண்டும்:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள், வரும் ஜூன் 30-ம்தேதிக்குள் இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை கட்டாயம் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இ-கேஒய்சி செய்யாத விவசாயிகள் அடுத்த தவணை நிதியுதவியை பெற முடியாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து :
காங்கிரஸ் அரசு கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (MGNREGA -100 நாள் வேலை திட்டம்) பதிலாக மத்திய அரசு வி.பி.ஜி.ராம் ஜி சட்டம் (VB G RAM G) என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த புதிய திட்டத்தில் 100 நாட்களுக்குப்பதிலாக வேலை நாள் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பபட்டுள்ளது. 100 நாள் திட்டத்துக்கான பணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்கும் நிலையில், புதிய திட்டத்தில் மாநிலங்களின் பங்களிப்பும் முக்கிமாகும்.
இந்த சட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வரும் என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் ஜூன் 30-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு புதிய சட்ட அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், ஏற்கனவே 100 நாள் வேலை திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ள அட்டைகள் புதிய திட்ட அட்டைகள் வழங்கும் வரை செல்லுபடியாகும் என்றும் அரசு கூறியுள்ளது.
ரெயில்வே அபராதத் தொகை உயர்வு :
ஜூலை 1 முதல் ரெயில் பயணிகளுக்கான சில விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன.
ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணிப்போர் மீது, இதுவரை 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்வது, நடைபாதை வியாபாரம் மேற்கொள்வது அல்லது பிச்சை எடுப்பது போன்ற செயல்களுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
அதேபோல் ரெயில் நிலைய வளாகங்களில் புகைப்பிடித்தால் ரூ.2000-மும், பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.2500-ம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ரெயில்களில் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றால் குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதமும், சம்பவத்தின் தீவிரத்தைப் பொறுத்து, குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் புதிய திருத்தம்!
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் (AAY) குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியத்துக்கு பதில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு 7 கிலோ வீதம் உணவு தானியம் வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.
தற்போது குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும், மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை) வழங்கப்படும் நிலையில் திருத்தப்பட்ட புதிய முறையில் நபர் ஒருவருக்கு 7 கிலோ வீதம் கணக்கிடப்பட்டு உணவு தானியம் வழங்கப்படும்.
இந்த திருத்தங்களுடன் கூடிய ‘தேசிய உணவு பாதுகாப்பு திருத்த மசோதா-2026’ குறித்து ஜூலை 13-ம்தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய உணவு அமைச்சம் அழைப்பு விடுத்துள்ளது.