அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியத்துக்கு பதில் நபர் ஒருவருக்கு 7 கிலோ வீதம் உணவு தானியம் வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.
மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (Antyodaya Anna Yojana - AAY) திட்டம், நாட்டின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, நாட்டின் ஏழைகளிலும் ஏழைகளான பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமான உணவு தானியம் வழங்க ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், விதவைகள், முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்), மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் முன்னுரிமை பெற்று பயனடைகின்றனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குச் சிறப்பு மஞ்சள் அல்லது பிங்க் நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும், 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. முன்னிரிமை குடும்பங்கள் (பிஹெச்) என்ற பிரிவில் வருபவர்களுக்கு குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 8 பேர் இருந்தாலும் 35 கிலோ மட்டுமே ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் நிலையில் முன்னுரிமை குடும்பங்களுக்கு 40 கிலோ கிடைக்கிறது.
இது குறித்து உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மிகவும் நலிந்த குடும்பங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் தற்போதைய குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டு முறை, குடும்பத்தின் அளவைப் பொறுத்து குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
புதிய மசோதாவின்படி, 2 உறுப்பினர்களைக் கொண்ட ஏஏஒய் குடும்பத்துக்கு மாதம் 14 கிலோ உணவு தானியம் கிடைக்கும். அதே வேளையில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்கு தற்போதுள்ள அதிகபட்ச வரம்பான 35 கிலோ வழங்கப்படும்.
‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’ன் நோக்கங்களுக்கு இணங்க, மலிவு விலையில் தரமான மற்றும் போதுமான அளவு உணவை உறுதி செய்யும் மனித வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தத் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
எனவே குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தானியம் வழங்கும் வகையில், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு 14 கிலோ உணவு தானியம் மட்டுமே கிடைக்கும்.
குடும்பத்தில் 5 பேர் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் 35 கிலோ உணவு தானியம் என்ற உச்சவரம்பில் மாற்றம் இருக்காது. குறைந்த உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு குறைவாகவும், அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ உச்சவரம்புடனும் உணவு தானியம் கிடைக்கும்.
இந்த மாற்றத்துக்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திருத்தங்களுடன் கூடிய ‘தேசிய உணவு பாதுகாப்பு திருத்த மசோதா-2026’ குறித்து ஜூலை 13-ம்தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய உணவு அமைச்சம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மாற்றத்தை செய்வதாக மத்திய உணவு அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது, முன்னுரிமைக் குடும்பங்கள் மற்றும் ஏஏஒய் குடும்பங்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பகுதியில் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறியவும், புதிய விண்ணப்பங்களின் தகுதியைச் சரிபார்க்கவும் அதிகாரப்பூர்வ இந்திய தேசிய உணவுப் பாதுகாப்பு போர்ட்டலை (NFSA) அணுகலாம். மேலும், பொது விநியோகத் திட்ட சேவைகளுக்கு உங்கள் மாநில அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.