

இந்தியா உள்பட அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கொண்டுள்ள நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி 10% ஆக குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திருத்தப்பட்ட சுங்கவரி 150 நாட்கள் அமலில் இருக்கும். தற்காலிக வரிவிதிப்பு முறை பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை 12:01 முதல் அமலுக்கு வரவுள்ளது.
டிரம்ப் அறிவித்த வரிவிதிப்புகள் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறொரு சட்டத்தின் கீழ் தற்காலிகமாக 10% வரியை விதித்துள்ளார் டிரம்ப்.
முன்னதாக உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் விதித்த கடுமையான வரிவிதிப்பு தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பல நீதிபதிகள் அடங்கிய பென்ச், 6-3 வாக்கெடுப்பில் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி உத்தரவை செல்லாது என தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பில் 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ், டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் என்றும் நீதிபதிகள் தெளிவாக குறிப்பிட்டனர்
அமெரிக்க அரசியலமைப்பின்படி, உலகின் அனைத்து நாடுகளுடனும் போரில் இல்லை என்பதால், பொதுவான வரி விதிப்பு செல்லாது என தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் டிரம்பின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், டிரம்ப் போன்ற நபர்கள் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதிக சுங்கவரி விதிக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சற்று நிம்மதியை அளித்துள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள், இறக்குமதி வரிகளை விதிக்க பயன்படுத்தப்பட்ட சட்டம் “அதிபருக்கு சுங்கவரி விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.
இதனால் பல நாடுகளுக்கு ஒருதலை பட்சமாக விதிக்கப்பட்ட வரிவிதிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுங்கவரி திரும்ப கிடைக்குமா என்பது பற்றி நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், பங்குச் சந்தைகள் சரசரவென உயர்ந்தன. S&P 500 0.69%, Nasdaq Composite 0.9%, மற்றும் Dow Jones Industrial Average 230.81 புள்ளிகள் உயர்ந்தன.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, “அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நாட்டின் நலனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பளித்த நீதிபதிகளால் நான் முற்றிலும் வெட்கப்படுகிறேன். இருப்பினும் 1974 வர்த்தக சட்டப்பிரிவு 122 இன் படி, அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 150 நாட்களுக்கு 15 சதவீதம் வரை வரி விதிக்க முடியும்.
வரிவிதிப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்தாலும், தற்போது அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10% வரியை விதிக்கிறேன். இந்த வரிவிதிப்பு பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வரும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் சமீபத்திய அறிவிப்பின் படி, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்கவரி 10% ஆகக் குறைக்கப்படும் என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு 25% ஆக இருந்த வரி, தற்போது 10% ஆக குறைவதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ள நாடுகளுக்கும், அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட சமீபத்திய அறிவிப்பின் படி சுங்கவரி விகிதம் 10% ஆகக் குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்