

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கணிப்புகள் கூறுகின்றன. வருகின்ற சட்டமன்ற தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திக்க விஜய் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போனது ஆகியவை விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அரசியலில் முழு வீச்சாக செயல்பட்டு வரும் விஜய், தனது அடுத்த பிரச்சாரக் கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்து விட்டார். கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து நாமக்கல்லில் பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய் அதற்கடுத்து, சிபிஐ விசாரணையால் பிரச்சாரக் கூட்டத்தை தள்ளி வைத்தார்.
இந்நிலையில் தற்போது அடுத்ததாக விஜய் வருகின்ற பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வேலூரில் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூரில் மக்கள் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாகவே, அடுத்ததாக வேலூர் மற்றும் சேலத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இந்த பிரச்சாரக் கூட்டங்கள் தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது வேலூரில் அணைக்கட்டு என்ற இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தை மேற்கொள்ள தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்ட நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் உரிய முறையில் அனுமதி கோரியுள்ளனர்.
காவல்துறையின் அனுமதி கிடைத்ததும், பிரச்சாரக் கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக சேலத்தில் பிரச்சார கூட்டத்தை மேற்கொள்ள மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் அங்கு பிரச்சாரக் கூட்டத்தை தவெக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது
வேலூரில் ஏற்கனவே பிரச்சாரக் கூட்டத்திற்கான கள ஆய்வை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் வேலூரின் அணைக்கட்டு என்ற இடத்தில் தொண்டர்கள் கூடுவதற்கான போதிய இட வசதி மற்றும் பார்க்கிங் வசதிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
நாளை மறுதினம் உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தங்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அன்றைய தினததில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 2 (திங்கட்கழமை) தவெக-விற்கு மிக முக்கிய நாளாக இருக்கும்.