அதிமுகவில் இபிஎஸ் பொதுச் செயலாரைாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக-வில் இபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு மற்றும் வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், காலை 11.30 மணிக்கு தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் அறிவித்தார்.
அதில் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதாவது:
அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். அக்கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். எனவே, இபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக் குழுக் கூட்டம் செல்லாது.
மேலும் அவர் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது. எனவே இபிஎஸ் தலைமையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. எனவே அக்கட்சியில் ஜூன் 23-க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்.
– இவ்வாறு நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்தார்.
ஜூலை 11- ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடுந்திருந்தனர். இந்த நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.