

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் உள்ள மாநகராட்சி மண்டலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எப்போது நுழைவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் நுழைந்தால் அங்கு 'பண மழை' பொழியும் என்பது மட்டும் விதியாகிவிட்டது.
சில நாட்களுக்கு முன்புதான் தமிழகம் முழுவதும் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் (SROs) அதிரடியாகப் புகுந்து, கணக்கில் வராத ரூ.37.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பதற்றம் தணிவதற்குள் அடுத்த அதிரடியில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை தமிழகத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை (RTO) குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் (Driving License), வாகனப் பதிவு (RC Book), தகுதிச் சான்று (FC) போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்க, மேசைகளுக்கு அடியில் பாய்ந்த லஞ்சப் பணப் பரிவர்த்தனைகளை பறிமுதல் செய்வதுதான் இந்த சோதனையின் முக்கிய நோக்கம். அந்த ஒரே நாள் சோதனையில் கணக்கில் வராத ரூ.31,85,700 ரொக்கப் பணம் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இதுமட்டுமன்றி, ஆன்லைன் பரிவர்த்தனைகளைத் தோண்டியபோது, 'ஜிபே' மூலமாக மட்டுமே ரூ.5,95,468 லஞ்சப் பணம் கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.
இந்நிலையில் தான் அடுத்த அதிரடியாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் மாநகராட்சி மண்டலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை, நாமக்கல் மாவட்டம், புதுக்கோட்டை, மாநகராட்சி அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி, திருப்பத்தூர், திருச்செங்கோடு நகராட்சி அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுமக்களிடம் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு துறையாக, குறிப்பாக அதிகமாக பணப்பரிவர்த்தனை நடக்கக்கூடிய, மக்கள் சேவை எந்தெந்த துறைகளில் அதிகம் இருக்கிறதோ அந்த துறைகளிலும், லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வரும் துறைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை இந்த சோதனை நடப்பதாகவும், தொடர்ந்து வந்த லஞ்சப் புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சோதனைக்குப் பின் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், அது தொடர்பான பிற ஆவணங்கள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அரசு பொறுப்பேற்றதும் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் துறை ரீதியான சோதனைகள் நடத்தப்படுகிறது. லஞ்சம் ஒழிந்தால்தான் தமிழக அரசு கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியும் என்பது விஜய்யின் கணக்காக உள்ளது. ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிக்கும் முயற்சியில் விஜய் அரசு தீவிரம் காட்டி வருகிறது.