நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருப்பது குறித்து, நீலகிரி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ‘கடவுளின் குழந்தை கையில் பிச்சை பாத்திரம்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அந்த ட்விட்டர் பதிவில்,
‘கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம்!
அட்சயப் பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும்;
கடவுளை மற
மனிதனை நினை!
பெரியார் வாழ்கிறார்!’
என்று போட்டிருந்தார்.
கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு பாஜக அரசு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால், தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளது. இதற்குக் காரணம் இக்கட்சி பெரிதாக நம்பி இருந்த உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளை இழந்தது. அதுமட்டுமின்றி, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட இக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால், பாஜகவே எதிர்பாராத விதமாக, தங்களது கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், சிவசேனா ஷிண்டே பிரிவு 7 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 5 இங்களிலும் வெற்றி பெற்று பாஜகஆட்சி அமைக்க வேண்டிய எண்ணிக்கையைப் பெற்றுத் தந்து ஆறுதலைத் தந்தன. இதனால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதீஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் மற்றும் சில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஐந்து ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடியால் ஆட்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைனாரிட்சி ஆட்சியாகவே அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடரப்போவது உறுதியாகியும் இருக்கிறது.
முன்னதாக, நரேந்திர மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் என்னுடைய அம்மா இறக்கும் வரை சாதாரண ஒரு மனிதனாகவே என்னை நினைத்தேன். ஆனால், அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும்போது, நான் உயிரியல் ரீதியாக என்பதை தாண்டி, கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்ற நினைக்கிறேன். இந்தப் பதவி, புகழ் எல்லாம் கடவுள் கொடுத்ததுதான். அதனால்தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெற்றுள்ளேன் என நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால், நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும்தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்" என்று பிரதமர் மோடி கூறி இருந்தது நினைவிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், ‘கடவுளின் குழந்தை மோடி’ என்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மை பெறாதது குறித்து, 'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்’ என்று நீலகிரி திமுக எம்பி ஆ.ராசாவின் ட்விட்டர் செய்திக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.