நடைபெற்று முடிந்திருக்கும் 18வது பாராளுமன்றத் தேர்தல், பல்வேறு ஊடகங்களின் அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, ‘என் வழி தனி வழி’ எனும் பாணியை நாட்டு மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சித் தலைவர்களால் அலோசனைக்காகவும் அரசியல் ஆருடம் கேட்பதற்காகவும் தேடப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் இவர் கூறிய அரசியல் ஆருடங்கள் பலவும் உண்மையாகிப்போயும் இருக்கின்றன, பொய்த்துப்போயும் இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலிலும் தனது கருத்துக் கணிப்பு ஆருடத்தைக் கூறியிருந்தார்பிரசாந்த் கிஷோர். அதாவது, “2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெற்ற தொகுதிகளைவிட அதிகமாகப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதற்காக அனைத்து சாத்தியக்கூறுகளையும் பாஜக தற்போது பெற்று இருக்கிறது. அதேபோல், தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும். இந்த மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக 300 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று அரசியல் ஆருடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால், நடந்தது அனைத்தும் அவர் கூறியதற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால், அவர் கூறியதில் ஒன்று மட்டும் நடந்திருக்கிறது. அதாவது, ‘பாஜக ஆட்சி அமைக்கும்’ என்று கூறியது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.
இது மட்டுமின்றி, பல்வேறு ஊடகங்களும் பாஜகவே 300 இடங்களைப் பிடிக்கும் 350 இடங்களைப் பிடிக்கும் என, ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்பது போல் தங்கள் விருப்பத்துக்கு கற்பனை கருத்துக்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாகிப் போய் இருக்கின்றன. அது மட்டுமின்றி, பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க பெற வேண்டிய 272 தொகுதிகளைக் கூடப் பெற முடியாமல் போனது. மேலும், தேர்தலுக்கு முன்பும், வாக்குப்பதிவுக்கு பின்பும் கூட பெரிதாகக் கண்டுக்கொள்ளாமல் இருந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் பெரும் ஆதரவினாலேயே இன்று பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு தேர்தல்களின்போதும், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வெற்றிக்கான வியூகங்களையும் அரசியல் ஆருடங்களையும் வழங்கி விட்டு பெருந்தொகையை சம்பாதிக்கும் பிரசாந்த் கிஷோர் போன்றோரின் கருத்துக் கணிப்பு ஆருடங்கள் இம்முறை பொய்யாகிப்போய் இருக்கின்றன. இப்படி கற்பனை தேர்தல் கருத்துக் கணிப்பை வழங்கி இருந்த அரசியல் ஆருடர் பிரசாந்த் கிஷோர் எங்கே இருக்கிறார் என்று தற்போது அரசியல் நோக்கர்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.