
குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தது. 2010-ம் ஆண்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் பெயர் கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். அதாவது, ஊரகப்பகுதிகளில் உள்ள குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றி, அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் மாநிலத்தில் சுமார் 8 லட்சம் குடிசைகள் இருப்பது தெரிய வந்தது.
அந்த வகையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வகையில், ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாட்டில், 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் தகுதியானவர்கள்? தேவையான ஆவணங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, புதிதாக வீடு கட்டுபவர்களாக இருப்பின் தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே வீடு இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வீடு கட்டலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான தேவையான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதுடன், பயனாளர்கள் தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினாலும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை கடனும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
விதிமுறைகள், வழிகாட்டி நெறிமுறைகள்
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிக்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆர்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும் என்றும் கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட்டை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சொந்த இடத்திற்கு பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணம் வழங்கப்படும். ஒருவேளை கூட்டுப் பட்டாவாக இருந்தால், தனிப்பட்டாவாக மாற்றிய பிறகு இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.
* சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்களும், பயனாளியின் குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு என ஏதேனும் போட்டிருந்தாலும் அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற தகுதியற்றவர்கள்.
* ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுத் தொகை ரூ.3,50,000/. இந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
* இலவச வீடு வழங்கும் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் இருக்கும் ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டியது கட்டாயம்.
* அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியராகவோ இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியில்லை.
தேவையான ஆவணங்கள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ரேஷன் கார்டு, முகவரி சான்று, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் பாஸ்போட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், வீட்டிற்கான பட்டா & சிட்டா, வீட்டு பத்திரம் நகல், வங்கி கணக்கு விவரங்கள்- போன்ற ஆவணங்களை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (KVVT survey) மறுகணக்கெடுப்பு, புதிய குடிசைகள் கணக்கெடுப்பு மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு போன்ற தமிழக அரசால் நடத்தப்படும் மூன்று வகை கணக்கெடுப்பின் மூலம் தான் இதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை இந்த மூன்று வகை கணக்கெடுப்பிலும் விடுபட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கிடக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விபரங்கள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, கிராம சபையின் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த பயனாளிகள் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மாவட்டத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள், உங்களுடைய விண்ணப்ப நிலை குறித்து https://www.tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Selected Candidates என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் உங்களுடைய பெயர் அந்த பட்டியலில் காட்டும். அல்லது வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால், Waiting List Candidate என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.