

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய, புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15-ந்தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த உரிமைத்தொகை இதுவரை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, தற்போது புதிதாக விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்களை கிராம வாரியாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கள ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
விண்ணப்பித்த புதிய பயனாளிகளுக்கு எல்லாம் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ஒருவேளை இதுவரை தகுதியான பெண்கள் யாரேனும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பிக்காமல் இருந்தால் உங்கள் மாவட்டத்தில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஏனெனில் வரும் நவம்பர் 14-ம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நிறைவடைய உள்ளது. சில மாவட்டங்களில் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் எஞ்சியிருக்கும் மாவட்டங்கள் குறித்த விவரத்தை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஊரில் இன்னும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ இன்னும் நிறையவடையவில்லையெனில் அதில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதுவே உங்கள் ஊரில் முகாம்கள் நிறைவடைந்திருந்தால், கவலைப்பட வேண்டாம். மாற்று வழியாக வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் முகாமில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு மனு கொடுக்கலாம்.
இவ்வளவு நாட்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறவிட்டவர்கள், இந்த முயற்சியை தவற விடாமல் இந்த திட்டத்தில் சேர்ந்து 1000 ரூபாயை பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.
