

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் ரூ 1000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண், பிங்க் ஆட்டோ போன்ற புதிய, புதிய திட்டங்களை கொண்டு வந்து மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 லட்சம் மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து விடுபட்ட பெண்களுக்கு உதவி தொகை கிடைக்க வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1.31 கோடி மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000யை தமிழக அரசு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 15-ம்தேதி தான் விடுவிக்கப்படும். ஆனால் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில், பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரூ.5000 பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த மெசேஜை பார்த்த பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
வழக்கமாக மாதந்தோறும் 15-ம்தேதி உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் நிலையில், நாளை (பிப். 14) இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், பிப்.15 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இன்றே வரவு வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ரூ.5000 பணத்தை எடுக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பணம் எடுக்க கூடியதால் வங்கியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதேசமயம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில், ‘தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதால், முன்கூட்டியே ரூ.3000 வழங்கப்பட்டதாகவும், கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 சேர்த்து வழங்கப்பட்டதாகவும்’ கூறினார்.
அதுமட்டுமின்றி, 2026 தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்தால், ரூ.2 ஆயிரமாக உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த வாய்ப்புள்ளதாக நினைத்து தமிழக அரசு முன்கூட்டியே ரூ.5000 வழங்கி உள்ளது. இதற்காக அரசு ரூ.6550 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உதவித்தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்...
மகளிர் உதவித்தொகை ரூ.5000 பெண்கள் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் செல்போன் எண்ணுக்கு கட்டாயம் மெசேஜ் வந்திருக்கும். அப்படி மெசேஜ் வரவில்லை என்றால் நேரடியாக வங்கிக்கு செல்லுங்கள். அங்கு வங்கி அதிகாரியிடம் உங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்துவிடும்.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொண்டிருப்பவராக இருந்தால், கண்டிப்பாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இம்முறையும் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு வந்து இருக்கும். ஒரு சிலருக்கு கணக்கிற்கு பணம் வந்திருக்கும், ஆனால் மெசேஜ் வந்திருக்காது.
அவர்கள் வங்கியில் சென்று தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில், ஒரு சில பெண்களுக்கு முன்கூட்டியே (நேற்று )ரூ.5000 வந்திருக்கலாம். சிலரின் வங்கிக் கணக்குக்கு வருவதற்கு தாமதமாகலாம். ஏனெனில் இன்று, நாளையும் வங்கிகள் விடுமுறை என்பதால் திங்கள் கிழமை கூட விடுபட்டவர்களுக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை மாதாமாதம் ரூ. 1000 பெற்று வரும் பெண்களுக்கு ரூ. 5000 உங்கள் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்றால் பதற்றப்படாமல் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். மேலும் cmhelpline.tnega.org என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
விடுபட்டவர்களுக்கு விரைவில் அவர்களது வங்கி கணக்கிற்கு உதவி தொகை வரவு வைக்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் ரூ.5000 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பணம் வரவில்லை என்றால், அது தொடர்பான புகார்கள் எழுந்தால், அது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் விளக்கம் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.