

தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் நேற்று (13-02-2026) காலை 5 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது" என முதலமைச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் தள பதிவில் அறிவித்தார். மேலும் இந்தத் தொகைக்கான விளக்கமாக "பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என கூறி காலையிலேயே பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தார்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக அரசு ஒரே தவணையாக ரூ.5,000 தொகையை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கியுள்ளது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது. உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும் தொகைக்கு தகுதி பெறாதவர்கள் மனதில் ஆதங்கம் எழுந்துள்ளதும் கவனிக்க வேண்டும்.
இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மு.க.ஸ்டாலினால் 15 செப்டம்பர் 2023 அண்ணா பிறந்தநாள் அன்று அறிமுகப்படுத்தப்பட்டு ரேஷன் கார்டில் உள்ள தகுதிகளின் அடிப்படையில் மாதந்தோறும் ₹1,000 குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த உரிமைத் தொகை பெண்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. குடும்ப அட்டை விவரங்கள் (ரேஷன் கார்டு) தவறாக இருப்பது, ஆதார்-வங்கி கணக்கு இணைப்பில் பிழை இருப்பது, வருமானம் குறைவாக கொண்ட விதிமுறைக்கு உட்படாதது, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதது, ஏற்கப்பட்டதல்லாத பொது / தனியார் நிதி உதவிகளை பெறுதல், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு/பொது துறை பணியாளர்கள், அதிக மின்சார பயன்பாடு அல்லது பெரிய சொத்து கொண்டவர்கள் (அரசு விதிகளின்படி) போன்ற காரணங்களால் மனு நிராகரிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளால் வடிகட்டப்பட்டவர்கள் புதிதாக மீண்டும் விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பையும் அரசு வழங்கியுள்ளது.
கடந்த 15 ஜூலை 2025 இல் தொடங்கி நவம்பர் 2025 வரை பல மாவட்டங்களில், (including Chennai wards ) குறைகள் மற்றும் அரசின் பல திட்டங்களுக்கான விண்ணப்ப சேவைகள் வழங்கப்பட்டன. இதில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி மீண்டும் நகர் தோறும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்து தங்கள் உரிமைத் தொகையை பெற்றனர். இதிலும் பல பெண்கள் விடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசை குறை சொல்வது தவிர்க்க வேண்டும்.
காரணம் மகளிர் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் ஒன்று தவறினாலும் தொகை வருவது நிராகரிக்கப்படும். உதாரணமாக ஒரு வீட்டில் திருமணமாகியும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்படாமல் இருக்கும் வாரிசுகள் (குறிப்பாக மகள்கள்) இன்கம்டாக்ஸ் கட்டும் நிலையில் இருந்தால் நிச்சயமாக அந்த வீட்டுத் தலைவி உரிமைத் தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு என்ன வழி? இருக்கிறது. இது போன்ற சிக்கல்களைத் தீர்க்கவே
மாதந்தோறும் நடைபெறும் மாதாந்திர பொதுக்குறைதீர் முகாம் (PDS grievance redressal camp) நடத்தப்படும் என அரசே அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குடும்ப அட்டை குறைகள், பெயர்/முகவரி/கைபேசி மாற்றம், புகார்கள் மற்றும் சேவை குறைகளை பதிவு செய்யலாம்.
இங்கு சென்று தொகை பெறத் தடையாக உள்ள பெயரை நீக்கி விட்டு மீண்டும் புதிதாக அரசு அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாம் வரும் போது அதன் மூலமாக நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
விட்டுப்போன ரூபாய் 5000-த்தை மறந்துவிட்டு இனி வரப்போகும் தொகைகளை பெற இப்போதே தவறு என்ன என்பதைக் கண்டறிந்து ஆவன செய்வீர்களாக.