ஏன் சிலர் மட்டும் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், மற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனிலேயே இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு ராபர்ட் கியோசாகி எழுதிய Rich Dad Poor Dad புத்தகம் ஒரு மிகச் சிறந்த பதிலைச் சொல்கிறது. நாம் பள்ளிக்கூடத்தில் படிக்காத, ஆனால் வாழ்க்கையில் ஜெயிக்கத் தேவையான அந்தப் பணப் பாடத்தை விரிவாக பார்க்கலாம் வாங்க.
சொத்து (Asset) vs பொறுப்பு (Liability)!
பணக்காரர் ஆவதற்கு அக்கவுண்டன்சி படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மிக எளிமையான ஒரு விதியைத் தெரிந்து கொண்டால் போதும். அதுதான் சொத்து மற்றும் பொறுப்புக்கு உள்ள வித்தியாசம்.
சொத்து (Asset): எது ஒன்று உங்கள் பாக்கெட்டுக்குள் பணத்தைப் போடுகிறதோ, அதுதான் சொத்து.
பொறுப்பு (Liability): எது ஒன்று உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை வெளியே எடுக்கிறதோ, அதுதான் பொறுப்பு, அதாவது கடன் அல்லது செலவு.
இந்த எளிய வித்தியாசம் தெரியாமல் தான் நடுத்தர வர்க்கத்தினர் மாட்டிக்கொள்கிறார்கள். உதாரணமாக, நீங்கள் லோன் போட்டு ஒரு கார் வாங்குகிறீர்கள். அதை 'சொத்து' என்று நினைத்து பெருமைப்படுவீர்கள். ஆனால், அந்த கார் உங்கள் பாக்கெட்டில் இருந்து பெட்ரோல், மெயின்டனன்ஸ், இன்சூரன்ஸ், மற்றும் வட்டி எனப் பணத்தை வெளியே எடுத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியென்றால் அது சொத்து அல்ல, அது ஒரு பொறுப்பு. அதே காரை வாடகைக்கு விட்டு, அது உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் ஈட்டித் தந்தால் மட்டுமே அது சொத்து.
Rat Race!
நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை ஒரு எலிப்பந்தயம் போலவே உள்ளது. நன்றாகப் படிப்பார்கள், வேலைக்குச் செல்வார்கள், சம்பளம் வாங்குவார்கள். சம்பளம் ஏறும் போது, கூடவே செலவுகளையும் ஏற்றுவார்கள். புது போன், பெரிய வீடு, கார் என்று பொறுப்புகளை வாங்கிக் குவிப்பார்கள்.
இதனால், மாதம் முழுதும் உழைத்த பணம் அனைத்தும் மாதக் கடைசியில் காணாமல் போய்விடும். மீண்டும் அடுத்த மாதம் சம்பளத்திற்காக உழைக்க வேண்டும். இந்தச் சுழற்சியில் இருந்து அவர்களால் வெளியே வரவே முடிவதில்லை.
பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள்?
பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை; அவர்கள் பணத்தைத் தங்களுக்கு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு, வருமானம் தரக்கூடிய சொத்துக்களை உருவாக்குகிறார்கள். பங்குகள், ரியல் எஸ்டேட், பாண்ட்ஸ் அல்லது தொழில் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடுகள் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட வருமானத்தை ஈட்டித் தரும். அந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர்கள் ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார்கள்.
நாம் பணக்காரர் ஆவதும், ஏழையாகவே இருப்பதும் நாம் வாங்கும் சம்பளத்தில் இல்லை, அந்தப் பணத்தை நாம் எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை, உங்கள் பாக்கெட்டில் பணத்தைப் போடும் 'சொத்துக்களை' வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் 'பொறுப்புகளை' குறைத்துக் கொள்ளுங்கள். .