கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு - எடப்பாடி எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி, இதுவரை 51 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கக் கோரி, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளைக் காட்டி பெரும் அமளியில் ஈடுபட்டதால் , சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதேபோல, பாஜக மற்றும் பாமகவிரும் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.

முன்னதாக, அதிமுகவினரும் பாமகவினரும் கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர். காலை சட்டசபை தொடங்கியதுமே அதிமுகவினர் கள்ளச்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகு இது குறித்தான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத அதிமுகவினர் சிலர் தொடர்ந்து அரசுக்கு எதிரான பதாகைகளைக் காட்டியும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் சபாநாயகர் அப்பாவு இருக்கைக்கு முன்பு சென்று கோஷமிட்டனர்.

அதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டும், அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் சட்டசபை சற்று நேரம் முடங்கிப்போனது. அதையடுத்து, சட்டசபை காவலர்களைக் கொண்டு அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து அதிமுக உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்… பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அதையடுத்து, சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே காவலர்களுக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறு தள்ளுமுள்ளும் அவர்களுக்குள் ஏற்பட்டது. அப்போது, காவலர்களை நோக்கி எடப்பாடி பழனிச்சாமி, ‘ஏன் அடிக்கிறீர்கள்? ஆட்சி மாறும்’ என்று விரலை நீட்டி எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரைப் போலவே, அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜுவும் போலீசாருக்கு எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com