கமலும், திமுக ‘பி’ டீமும் - ஜெயக்குமார் சுளீர்!

கமலும், திமுக ‘பி’ டீமும் - ஜெயக்குமார் சுளீர்!
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார், அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனப் பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த விஷயம் தான் தற்போது எல்லா மீடியாக்களிலும் தினசரி தலைப்புச் செய்தியாக மாறிவிட்டது. இதில் லேட்டஸ்டாக வந்த செய்தி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது தான். ஏற்கனவே டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். அடுத்த நாள் ராகுலும், கமல் ஹாசனும் சந்தித்து அரசியல், சமூகம் குறித்து ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.

அதன்பிறகு கமல் ஹாசனும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜல்லி கட்டு போட்டி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும்படி ராகுலுக்கு அழைப்பு விடுத்தார்கள். ராகுலும் வர சம்மதம் தெரிவித்தார், கூடவே தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அழைக்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சியை கேட்டுக் கொண்டார்.

அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனப் பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

காங்கிரஸிற்கு கமலின் ஆதரவு பற்றி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

கமலை திமுகவின் ‘பி’ டீம் என்று நாங்கள் ஏற்கெனவே விமர்சித்திருக்கிறோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவிற்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார். இதனால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.

அதேசமயம் அதிமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகள் நிச்சயம் மக்களை கவரும். எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் சரி. மக்களின் எழுச்சி, புரட்சி முன்பு எல்லாமே தவிடு பொடியாகி விடும். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.

திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வராக கருணாநிதி தான் இருந்தார். அப்போது தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு மாயத்தேவரை நிற்க வைத்து கழக தலைவராக எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். அப்போது திமுக தோற்கவில்லையா?

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவும் வரலாறு படைக்கும். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து உட்கட்சி பூசலால் தவித்து கொண்டிருப்பதாக தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அது ஒரு மாயை. உண்மை கிடையாது. கள நிலவரம் என்னவென்றால் அதிமுக ஒன்றுபட்டு நிற்கிறது. நிச்சயம் திமுகவை வென்று காட்டுவோம்.

கமல் ஹாசனை பொறுத்தவரை திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தான் வருவார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com