

முதலமைச்சர் விஜய் இன்று (22-ந்தேதி) திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ‘காலை உணவு விரிவாக்க திட்ட’த்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் ‘காலை உணவுத் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister's Breakfast Scheme) கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்’ என மாற்றப்பட்டது.
இந்நிலையில் திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ‘காலை உணவு விரிவாக்க திட்ட’த்தை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்தார். பின்னர் வரிசையாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் பின்னர் மாணவர்களுடன் தானும் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்
இன்று காலை உணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூன், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் 7537 அரசுப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34.64 லட்சம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாகப் பயனடைவார்கள்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் புதிதாகப் பயனடைவர். நடப்பு நிதியாண்டில் இத்திட்ட விரிவாக்கத்திற்காக கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்த திட்ட மதிப்பீடு ரூ. 724 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் வாயிலாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் காலை உணவு வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.