கன்னட மொழி வளர்ச்சித்துறை, கன்னட மொழிப் படங்களை கற்றுத்தர தயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. இரண்டாவது மொழிப்பாடமாக கன்னடத்தை கற்றுக் கொள்ளத் தயங்கும் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கன்னட மொழியை பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கன்னட வளர்ச்சித்துறை, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் மக்களுக்கு எளிய முறையில் கன்னடம் கற்றுத் தரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இது தவிர கர்நாடகாவில் பிரதான மொழியாகவோ அல்லது இரண்டாவது மொழியாகவோ கன்னடம் கற்றுத் தரப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகளையும் செய்து வருகிறது.
2015ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் கன்னடம் கற்றுத் தரவேண்டும் என்பது சட்டமாக கொண்டு வரப்பட்டது. 2022ல் பிறப்பிக்கப்பட்ட புது சட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. பெங்களூர் போன்ற மாநகரங்களில் உள்ள பள்ளிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக இருப்பதால் கன்னடத்திற்கு பதிலாக சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியை தேர்வு செய்ய பெற்றோர்களும் மாணவர்களும் விரும்புகிறார்கள்.
சென்ற வாரம் பெங்களூரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் இரண்டாவது மொழியாக கன்னடம் வேண்டாம் என்று 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தை அணுகியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடக கன்னட வளர்ச்சித்துறை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது. இது போன்ற கோரிக்கைகளை ஊக்குவிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு கன்னட வளர்ச்சித்துறை கடிதம் எழுதியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்கிற நிலை இருககிறது. ஆனால், சில தனியார் பள்ளிகளில் தமிழை புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. கர்நாடாகாவைக் போல் தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள்.